Sunday, 30 November 2014

புஷ்பாஞ்சலி

மனமகிழ் பிரியங்கள் தரும்
மாத்ருதேவ பிரம்பங்களுக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

உண்மைவழிகள் தந்து நன்மை வாழ்வளிக்கும்
உன்னத சத்திய சாநித்தியங்களுக்கு
சங்கு புஷ்பங்கள் சமர்ப்பணம்

நேர்மையெனும் சுடரொளியாய் சூழ்ந்து
நேசபாதுகாப்பாய் உடன்வரும் யோகா ஆன்மாக்களுக்கு
செவ்வரளி புஷ்பங்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!

கதி நானென

கதி நானென
அவள்
சரணடைந்த பின் தான்

அதுவரை அறியாத
கடவுளை
கும்பிட தோணுது

இன்னும்
இவளிருக்கும் வரை
சுமக்கும்
ஆயுள் கொடு என்று


பூமிச்சூல் காடு

உணவோடு
வாழ்வு
கொடுக்கிறது

மழைதரும்
மரப்பொக்கிஷம்
நிறைந்த

பூமிச்சூல் காடு

கரைதொட்டு விளையாடி...

நுரை தள்ளித்தான்
போகிறது

ஒவ்வொருமுறையும்
ஆவேசமாய்
ஓடி வந்து

கரைதொட்டு
விளையாடிப் போகும்

கடல் அலைக்கு

சுவாச மணத்தின் முன்

புகை பரப்பும்
சுகந்த பத்தி
தோற்றுப் போகிறதடா

புல்லரிப்பு தரும்
உன் சுவாச
மணத்தின் முன்

சந்தோஷம்

வாய் மூடி
சிரிப்பு அடக்கும்
குழந்தைகளில்

முகமெங்கும்
கனிந்துவழிந்து

தன்னிஷ்டமாய்
அப்பிக் கொள்கிறது

சந்தோஷம்

நினைவுச் தூறல்

பேசி முடித்து
சொல்லிக் கடந்தபின்னும்

நினைவுச் தூறல்
தூறி

உன்னை எனக்குள்
வேரூன்றுகிறதடா

மென் விழி தழுவும்
விதைப் பார்வைகள்

Saturday, 29 November 2014

ஆரோவில் எனும் அமைதி தேசம்

உலக அமைதி காக்க வந்த
உயர்சக்தி உறை சின்னமே போற்றி

மதங்கள் கடந்து மனிதம் சொல்லும்
மகத்துவபிரிய சின்னமே போற்றி

ஆலம் வேர்துளைத்த போதும் அசையாது
எழுந்து நிற்கும்....பிரம்ம சின்னமே

எங்கள் அன்னை தொடங்கிவைத்த
அமைதி கருவூலமே

ஆரோவில் எனும்..சமயம் கடந்த சன்மார்க்கமே..
போற்றி போற்றி

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!

அமானுஷ்ய கடத்தியாய்

சில நேரங்களில்
சிரிப்பும் அமைதியும்
சீர் நடை போட்டு
சூழ்ந்தாலும்

காரணமறியா வெறுமையில்
உருவமில்லா..
ஓர் சக்தி

உள்புகுந்து
தூக்கி செல்லும்
நம்மை

அமானுஷ்ய கடத்தியாய்

சுதந்திரத்தின் தேவாமிர்த ருசி

உயிரோடு
உறவுகள்...
உணர்வுகள் தொலைத்து

சப்தங்களில்
திடுக்கிட்டு
நடுக்கி...

மரண நொடி தப்பி

நடைபிணமாகும்
அகதி அறிவாள்

சுதந்திரத்தின்
தேவாமிர்த ருசியை..

கொம்பு மீசை

பிரிவணைக்க
ப்ரியஅழுத்த
முத்தங்களை
இதழ் ஒட்டி
அனுப்புகிறாய்

கையில் ஏந்தும் போதே
கடிதம் நீட்டி
குத்துகிறது

உன்
பொலிகாளை
கொம்பு மீசை

உணர்வுப் பார்வை

உயரம் பறக்கும்
பெயர்தெரியா பறவை

சிறகசைத்து
உசுப்பி போகிறதடி

உறைநிலையில்
சங்கமித்து

உலகு மறக்கும்
நம் உணர்வுப் பார்வைகளை

கடவுள்கள் இல்லை

பசியில்
குழந்தைகள் தவிக்கும்

பூமியில்

நிச்சயம்
காக்கும்
கடவுள்கள் இல்லை

அன்னை துதி

அன்பு நிறை அகப்பொருளே
அமைதிநிறை அணுப் பொருளே

கருணைநிறை கருப்பொருளே
கனிவுநிறை கவிப் பொருளே

மணம்நிறை மலர் பொருளே
மனம்நிறை மகிழ் பொருளே

தவம்நிறை தலப் பொருளே
தனம்நிறை தனிப் பொருளே

உயிர்நிறை உறைபொருளாய்
அன்னையென வந்த தனிப்பெரும்
யோகவேள்வியே.......

சரணம் சரணம் பரிபூரண சரணம் பரமமே.....

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே...!!!!!

அமலப் பார்வைகள்

அழகெடுத்து
அபிநய
சலங்கையாடுகிறாய்

நளினம் துள்ளும்
இடைக் கதவு சிக்கி

இமைக்க மறத்து
துடித்து சதிராடுகிறதடி

என்
அமலப் பார்வைகள்

கல் உறைந்த கடவுள்

புல்... பூ
இலை தழை
இயற்கையாலே

அர்சிக்கப்படுகிறது

வேண்டுதல்களுக்கு
காது கொடுக்கும்

கல் உறைந்த கடவுள்

என் திமிர்

செழுமை செதுக்கி

வளைவு பாதை தருகிறது
அவள் அழகு....

வந்த பாதை மறக்கிறது
என் திமிர்

மணநாள் வாழ்த்துக்கள்

அன்பின் ப்ரியங்களாய்..அன்றில் சொந்தங்களாய்
அழகின் முகவரிகளோடு ...
இனிமையாடும்...இளமைதோழிக்கு.... Chelli Sreenivasan
இனிய மணநாள் வாழ்த்துக்கள்

குழந்தை குறும்பாடி அனைவரையும்
சிரிக்கவைத்து சிந்திக்க வைத்து
சிறகு விரிக்கும்
அன்புத்தோழி நீ

உன்னைப் பார்த்து கற்றுக் கொள்ளவேண்டும்
வாழ்க்கையை இலகுவாய் அணுகுவதற்கு
அனைவரும்

காம்பவிழ்ந்த மொட்டாகவே...வேரின்றி
வேறிடம் ஊன்றப்படுகிறது..பெண் எனும் நிலநாத்து

அஃது தன்னியல்பு மாறாமல்
தனித்து செழித்தோங்கி..வம்சம் தந்து
வாழ்வு தழைக்க..எத்தனை புரிதல் பக்குவம் வேண்டும்

இணையென வரும் உயிர் சொந்தத்திற்கு

முற்பிறவி..வரமா..ஜென்ம ஜென்ம தவமா என்றே
அனைவரும் ஆச்சரியப்படவைக்கும்
அன்பு இணை பிறவிகள் நீங்கள்

செல்லியின் ..கருத்தில்..வெற்றியில்
அவர்தம் ஏகாந்த சுதந்திரப்பெருவெளியில்

உருவமில்லா தென்றலாய்
உடன் இணைந்திருக்கிறது...
பெருமாள் பெயரோனின் பேரன்புகள்

தாரைவார்த்து கொடுத்த குழந்தையை
தத்து எடுத்துகொண்டார்......மணமுடித்து....தன் குழந்தையாய்

நேர்மையெனும் அன்பின் புரிதல்களை
தன் வசப்படுத்தி...வாழ்வை வெற்றி லாவகாமாய்
இமையணைக்கும் இதய தோழியே...

என்றும் என்றென்றும்....அன்பெனும் அடையாளங்களாய்
இருவரும் இனிமைசூடி..இளமையாய்...
நேசப்பிரியங்கள் தளும்பி......

சரித்திரப் பெருவாழ்வு வாழ....

என் அன்னை வேண்டி வாழ்த்துகிறேன்

இனிய மணநாள் வாழ்த்துக்கள் தோழி..


உயிராடும் உறவு


கண் பார்க்காமல்
கட்டியணைக்காமல்
கை கோர்க்காமல்

உதிரம் பகிராமல்
உடன் பிறக்காமல்

சரிசம வயதில்
சமன் செய்யும்
பாசத்தில்

என்னை அவளும்
அவளை நானும்
பெயராய் எழுத

அனைவர்
அழைக்கும் குரலுக்கும்
இருவரும் திரும்பி பார்க்க


நான் அக்கா...
அவள் தங்கை...

என்பது...இருவருக்கும்
நம்பிக்கை உணர்வாடும்
உயிர் சொந்தம்...

உன் சிரிப்புகள் தாங்கும்
சக்தி தந்த இறைவன்...

இன்னும் உன் கண்ணீர்
தாங்கும் சக்தி எனக்கு தரவில்லை
என்றே நம்புகிறேன்...

என்னிடம் நீ
கலங்கும் போதெல்லாம்

உன்னை ஆறுதலணைத்து
என்னை நான் தைரியமாய்
வேஷமிட்டு மறைத்து

உயிராடும் உறவுகளை
நட்புகளாய் தந்த
முகநூல் கடவுளுக்கு நன்றி

உயிர் கடத்தி...!!!!

இருந்து
இல்லாத போதும்

நீஉடன் நடந்தால்

உற்சாகமாய் எனை
நகர்த்துமடி.....

உழைப்பெனும்
உயிர் கடத்தி...!!!!

*புஷ்பாஞ்சலி*



தியாக சுடரொளியாய் வந்த
திருஉரு பிம்பங்களுக்கு வெள்ளை ரோஜாக்கள்சமர்ப்பணம்.....

சத்தியம் ஆளும் நித்திய பிரமங்களுக்கு

சங்குபுஷ்ங்கள் சமர்ப்பணம்

ஆழ்மன யோக சக்தி தரும்
அன்பின் வேதங்களுக்கு
அல்லி மவர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!

தேன் மல்லி பெண்மை

கொன்று
தின்று போ
என்கிறேன்

வாழ்ந்து சா
என்றே
வரம் தந்து போகிறதடி

உன் வளைவுசுழிவு
தேன் மல்லி பெண்மை

மணக் கள்ளனே

சொல்ல வந்து
சொல்லாமல்

கேட்க வந்து
கேட்காமல்

நெருங்கி வந்து
தொடமல்

தவிக்க வைத்து
தளாமல் தடுமாறி

இழுத்து நான்
இதழ் கொள்ள

உன்
அழுத்த
மெளனப்பார்வை

போதுமடா...

என்
மணக் கள்ளனே!!

பெருந்தீனி அவள்

நினைக்க ....
பார்க்க....

பருவமெழுந்து
சிலிர்த்து

நாடி நரம்பு தவிக்க
பசிதரும்

பெருந்தீனி
அவள்

தாய்மழை மாமன்

சேறோடும்
செம்மண் சாலை

செழிப்பாய்
சொல்கிறது

தளிர்மரம் பூப்பெய்த
தாய்மழை மாமன்

தாளத்தோடு வந்து
சீர் செய்த
வளமையை

தும்பிக் காதலன்


சளைக்காமல்
சுற்றி வந்து

உறக்கமாடும்
சூல் மகளை

உரக்க குரலிட்டு
எழுப்பி....

வாடாமல் ..வதங்காமல்
களவு கொல்கிறான்

தும்பிக் காதலன்

பவித்ர பெண்மை


எவரும் தீண்டா
உன் திருவிளக்கு
பெண்மையில்

பவித்ர
இரவாய்

பதவிசோடு
சுடரேட்டப்படுகிறதடி

என்
ஆன்மம் எரியூட்டும்
ஆசைத் தீ!!

இசை நேசங்கள்

இடமிருந்த போதும்
நெருக்கடியாய்

இடித்துக் கொண்டு
துயில்கிறது

இணைபிரியா
இசை நேசங்கள்

Tuesday, 25 November 2014

ஒளிநம்பிக்கை

ஏற்றி வைத்த
கற்பூரத்தோடு
விளையாடி

உருகி வழியும்
கவலைகளை

ஒளிநம்பிக்கை வழி
பதட்டமாய் பாதை
திருப்புகிறான்

அந்த பொல்லாத
வருணப் பிரியன்

பிரிய வலைகளில்

உணர்வெடுத்து
என்னில்
வீடு கட்டுகிறாய்

உன் எட்டுக் கால்
பிரிய வலைகளில்

எட்டிவிரும்பி
சிக்கி

உயிரிழக்கிறது தலைவா

ஈரம்விழிக்கும்

என்
தேக கூச்ச சுபாவங்கள்

தாயெனும் உணர்வு சிநேகிதி

எதற்கெடுத்தாலும் திட்டி
எண்ணெய்படிய
வலிக்க
வாரி பின்னி

சத்தம் போட்டு
சாப்பிடவைத்து

ஆயிரம் சண்டை
போட்டாலும்

அடுத்த நொடி மறந்து
எல்லாம் பகிர்ந்து

சுண்டுவிரலில் முந்தானை
முடிச்சிட்டு உறங்க
நெற்றிமுத்தமிடும்
அவளே

நான் ஆயுள்தொடரும்

என் தாயெனும்
உணர்வு சிநேகிதி!!


அன்னபூரணி உணவகங்கள்

பசியோடு
ருசிவழங்கி

எரியும் தீ
அணைக்கிறது

தினக்கூலி
வயிறு நிரப்பும்

அன்னபூரணி
உணவகங்கள்

வறுமை மாணிக்கங்கள்....!!

கிளறி கிளறி
குப்பை பொறுக்குகிறது

கணிணி வளர்ந்து
கழனி தொலையும்

வல்லரசு நாட்டின்
வறுமை மாணிக்கங்கள்....!!!!

விழிப் பிஞ்சுகள்.....!!!!


ஆயிரம் முத்தங்கொஞ்சி

இடுப்பு இறக்கி
தனியமர்த்திய போது

அழுகைமொழிகூட
அறியாமல்....

தன்அசைவின்றி உறைந்து
தாய் அசைவுகளுக்கு திரும்பி

ஏக்கம் தவிக்கிறது
விழிப் பிஞ்சுகள்.....!!!!

அன்னை துதி


உண்மையெனும் ஒளியே
ஆனந்தவளர் செல்வமே

ஒப்பில்லா உயர்வேதமே
உடனிருந்து காக்கும் பிரியமே

நம்பிக்கை தரும் நலச்சுடரே
இளங்காலை இனிமையே

அமைதிகள் தரும் அன்புருவே
கனிந்த மன கருணைகளே

நின்துதி நான் துதித்து
நின்கதி சரணடைய

அணைத்து ஆளும் அன்னையே

சரணம் சரணம் பரிபூரசரணம் பரமதவங்களே....

ஓம் மாத்ரேய நமஹ ....ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!

என் நேச சண்டியரே

ஆளுமையாய் பேசி
அலட்சிய பார்வையில்
தெனாவெட்டு தெறிக்க

நீ 
நிற்கும் போதெல்லாம்

முடிவலிக்க ஆட்டி
முட்டிபோடவைக்க
மனம் கெஞ்சினாலும்

மிஞ்சும்ஆசை கொஞ்சி
உன் திமிரும் நான் ரசிக்க

குறும்புக் கண்ணடித்து
தப்பிக்கிறாயடா

என் நேச சண்டியரே

வேதனைதுயர் நதி

இதழிடும் அழுத்தங்களும்
இழுத்தணைக்கும்
வேகங்களும்

வலியோடு

வழிப்பாதை
விலக்குகிறதய்யா

பிரிவெனும்
வேதனைதுயர் நதியை

நிழலாகிப் போகிறது


நிழலாகிப்
போகிறது

இடுப்பு தம்பி தூக்கும்
அக்காளின்

முதுகு சுமையிழந்த
புத்தக கல்வி

" மணப் "பெண்மை

தொடுத்த பூ சூடி
தொடாத இடம்
காய.....தவித்து
காத்திருக்கிறது

மாமன் வந்து
தொடுக்க மலரும்

மயில் கன்னியின்
புது" மணப் "பெண்மை

நினைவுத் தென்னை

நீயில்லா
தனிமை கொல்ல

புருவக் கரையோரம்
பயிரிடுகிறேன்

கண்ணீர் ஊற்றி
செழிக்கும்

உன்
நினைவுத் தென்னைகளை....

தீரா வலி தீர...

தீரா வலி
தீரும் வழி
தேடி

வாச காணிக்கைகளுடன்
கடவுளை
வசமிழுத்து

கோரிக்கையிடுகிறது

அர்ச்சனை பிரார்த்தனைகள்!!

அரவிந்த மாலை


யோகவேள்வி வல்லமையாய்

வாழ்வு காக்கும் பரமமே போற்றி

அமைதியெனும் ஆனந்ததெளிவு தரும்
நாதச்சுடரே போற்றி

பயங்கள் விரட்டி பாதுகாப்புகள் தரும் 
உண்மையெனும் அன்னை தந்த வேதமே போற்றி போற்றி...

ஒம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!


காலப் பறவை.

அலகு கூர்
சிறகடிப்புடன்
புகுந்து
புகைந்து

எரித்து
சாம்பலாக்கி

உடன் தூக்கி பறக்கிறது

கேள்வி பதிலாய்

நமக்குள் நம்மை
பந்தாடும்

நினைவுக்கடத்தி
காலப் பறவை..

தங்க பிஞ்சுகள்

எண்ணெய் பசையில்லா
வறுமையிலும்.....

ஈர பிசுபிசுப்பாய்
சிரிக்கிறது...

அச்சடிச்ச தாளில்
இல்லை
ஆனந்தம்...என்பதை

முழுமையுணர்ந்த
தங்க பிஞ்சுகள்....

Sunday, 23 November 2014

பெண்மை...பெருந்தவ பிறப்பு

பெண்மை...பெருந்தவ பிறப்பு

ஒருகோடி உயிரணுவில் ஓரணு கரு உடைத்து
ஈரிணை குரோமோசோம் ஒன்றாய் இணைந்து
பிறந்த மகத்துவமா ...??

கலைமகள் மலைமகள் உடன் ஒளித்து
திருமகளாய் கொலுசாடி வந்த கோபுரத்திருவா ..?

கரு உதிக்கும் போது ....
நீயாய் தாயாய் உனை சில தாயுமானவன் தேட

சிறுவலி கொண்டே உனை நோக்குகிறாள்
பத்துமாதம் சுமந்தவள்

மீண்டும் நானா
இப்பூமியில் என....

ஒவ்வொருகட்டத்திலும் அவள் பெண்மையாய்
மாதச்சுழற்சி சிக்கி அனுபவித்த
படிமநிலை வலி அந்தகணத்தில் அந்த தாய்மையில்

வேண்டும் வேண்டும் ம் பெண்மகவு என நினைக்கும்
ஒவ்வொரு தாய்மையும் ஒருசிறு சலனமாய்..சிலநொடிகள்
இமை மூடி மனதுக்குள் குமைகிறாள்.......அதுவரை கடந்த
தன் அனுபவ பெருவழி நினைத்து

கல்வியில் கேள்வியில்...
அன்பில் அனுபவத்தில் ...
பக்குவத்தில் பராமரிப்பில் நிமிர்ந்த திமிராய்
வலம் வந்தபோதும்...தாய்மையாய் ஆண் உணர்ந்த போதும்

உடலாய் மட்டுமே பார்த்து வீழ்த்தப்படுகிறாள்
ஒவ்வொருகட்டத்திலும் எதிர்படும் தலைகண ஆண்மைதிமிரால்

வெளிவராத போது இருந்த சுதந்திரம் கூட
வெளிவந்து அவனி ஆளும் போது
அவள் கற்புக்கு மிச்சமில்லை

கணவனை விட ..சகோதரனைவிட
மகனைவிட......
சில நேரங்களில் தாயை விட

தகப்பன் எனும் உறவினால் மட்டுமே..புரிதலாய்.
அதிகம் கொண்டாடப்பட்டு நேசிக்கிப்படுகிறாள் பெண்.....

ஆண் கொண்டாடப்படும் பிரியங்களில்
தனக்கு கொடுக்கா முக்கியத்துவங்களில்
மனப் பொறாமை விழித்தெழுந்து
பல இடங்களில்
பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகவும் போகிறாள்

காக்கும் சக்தியாய் வந்த
ஆக்கும்சக்தியும் அவளே
அழிக்கும் சக்தியும் அவளே ஆகிப்போகிறாள்

சில வார்த்தைகளில் சில பார்வைகளில்
சில்லறைப்பேச்சுகளில் பெண்ணை குழி வீழ்த்தும்
நுனிநாக்கு விஷத்தை கூடவே வைத்து இங்கு அலைகிறது
மிருக மானிடம்

ஆண்..
தாயை ..மகனில் புரிகிறான்
சகோதரியை ...தாயில்லாத போது உணர்கிறான்
மனைவியை.....நோய்காலத்தில் நெஞ்சுருகுகிறான்
மகளில் மட்டுமே ..தன் திமிர் காலத்தில் பிஞ்சுக்கால் விழுகிறான்

ஆதாம் விலா எலும்பில் உருவாகிய
பூமி சுழல் சரித்திரமே

போற்றோர் போற்ற
தூற்றோர் தூற்ற..
கனிவாய் பிறந்து
கள்ளிப்பால் தப்பி வளர்ந்து

கொடும்பார்வை தீண்டா
பருவம் வளர்த்து

தான் எனும் ஈரம் உணர்ந்து
தனியாய் பெண்மை பூத்து காத்து

தனியொருவனிடம் மொட்டு கற்பவிழ்த்து
தாய்மையெனும் மகுடம் சூடி

தனக்கெனும் வாழ்வு துறந்து
அனைவர்தேவையும் நிறைத்து

மண்ணுள் விதையும்
ஆலம் பெரும்காடே....

நீயே அவனி...நீயில்லால் இயங்குமா
இங்கு மானிடப் பிறவியின் நிம்மதிச்சூல் அகிலம்

பெண் என்று பெருந்தவஞ் சூடி பிறப்பெடுத்து வந்த
என் பெண்மை நேசங்களுக்கு

சர்வதேச பெண்கள் தின வாழ்த்துக்கள்.....

குப்பை மனிதங்களின் கோரச் செயல்

குப்பை மனிதங்களின்
இரவு உணர்வு சமைத்த
இளங்குருத்து பரிதாபங்கள்.....

ஆசை எழுந்து ஆடியதா
வேட்கை எழுந்து வேகம் கண்டதா

தந்தவன் சென்று ஓடினானா
தாய் என சுமந்தவள் ....
தன் மாதக் கணக்கு ..சுழற்சி மறந்தாளா

கருவென கண்ட பின் அழிக்கா இயலா
மனநிலை கொண்டாளா...இல்லை
மருத்துவநிலை தடுத்ததா

எதுவோ சூழ்நிலை...அறியாததால்
இழிநிலை கொண்டது இளம்பிஞ்சு

தொப்புள் கொடி காயம்
இன்னும் ஆறவில்லை

பனிக்குட ஈரப்பிசுபிசுப்பும்
காயவில்லை

தோள்வளரா சிட்டு
தொட்டில் கண்டது ..குப்பைத் தொட்டியில்

காண்போர் கண்கள் எல்லாம்
கலங்கி குளம் கட்ட.....

கவலையறியாது..கனவோடு
விதிபடைத்தவனிடம்
விளையாடி ....உறக்கத்தோடு
உதடு மலர்த்தி சிரிக்கிறது....சின்னபிஞ்சு

ஈவு இரக்கமில்லாமல்
விடுதலை என வீசிச் சென்றவளே

வாழ்வுமுறை தப்பிய உன் வயசுத்திமிருக்கு
இது என்ன..வழி... பாவம் செய்தது..??

பத்துமாத சலிப்பாய் சுமந்தவளே
ஊற்றாய் சுரந்து ..மேனி நனைக்கும்

உன் சீம்பால் வற்ற ...வலி பொறுத்து நீ
என்ன வைத்தியம் மேற்கொண்டாய்..??

நல்லவேளை....
உன் கம்ச நெஞ்சிலும் ...
கொஞ்சம் ஈரம் இருக்கிறதடி..இயலாமையே

கள்ளிப்பால் இரையாக்காமல்
உயிர்பிச்சையாவது தந்தாயே ..உன் உதிரத்துக்கு

இல்லை ஒரு பிள்ளையென
தவமிருக்கும் மானிடத்துக்கெல்லாம்
கருப்பை சுருக்கி இறுக்கி முடிச்சிடும்
கருணை தெய்வமே

பிள்ளையை அனாதையாக்கி
பெண்மையை தாய்மைஏங்க வைத்து
என கண்ணீர் சமைக்கும் ...

இறைவனே...இது
உன் திருவிளையாடலா
திமிர் விளையாடலா

சந்திர சூரியனாய்.....
ராகு கேது..நட்சத்திரப் பலன்களுடன்

சுழலும் வாழ்க்கையை
சுழட்டிச் சோவி போட்டு

மானிட இல்லாமை தான் தருகிறது
மாயச்சுழற்சி....விதிக் கோல ...

இறை நம்பிக்கை
கோள்களின் காலம்

அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்


அஸ்தினாபுரம் தந்த அங்கதேச அரசன் நான்

பிறப்பறியா பிள்ளையாய்
வளர்ப்பறிய வகைப் படுத்தபட்ட வீரனும் நான்

துர்வாசர் மந்திரம் சோதிக்க
சூரியன் அழைத்த குந்தியின்

காதுவழி கவசகுணடலமேந்தி வந்தது
கர்ணனெனும் என் பிறவி

அன்னையவள் பயம் கவ்வி
ஆற்றோடு சுழலாடி அனாதையானதில்
தேரோட்டி ஒருவன் கை சிக்கி
சீராட்டி ராதே வளர்க்க.......
மீசை முறுக்கேறியது இளமை

சத்திரிய வீரத்தில் ரத்த அணு துடிக்க
பிராமண வேடமேந்தி பரசுராமரிடம் பணிந்து வில் ஆள
வண்டெடுத்து தொடை துளைத்த
இந்திரன் சதியில்...குரு உறங்க அமைதி காக்க

பொய் வினை சாபமாய்
குத்தப் பட்டது என் உயிரின் முதல் அம்பு

சத்தம் கேட்டு இலக்கு தாக்கும் திறனறிய
பார்க்காமல் பசு கொல்ல ...பாப்பன் சாபம்..குத்துகிறது
இரணடாவது அம்பாய்

அழுத சிறுமிக்கு
நெய்பிரித்த மண்ணினால்
கசங்கி துடித்த பூமா தேவி குத்தினாள்
மூன்றாவது அம்பு

பாண்டவ மூத்தோனாய் பாராள பிறந்த
என்னின் வீரவேள்..கூர்தீட்டப்படுகிறது
துரோணாச்சாரிய புறக்கணிப்பில்
குருவின்றி தந்தை அஸ்தமனத்தில் குலவித்தை கற்க.....

கற்ற கலை கையெடுக்க நடுக்கூடத்தில்
வளர்ந்த சாதி அவமானபடுத்த
வீழ்ந்த தலை நிமிர்த்தப்பட்டு
ராஜமகுடம் சூடப்படுகிறது...
தோழனென தோளணைத்த துரியோதனனால்

கேடாய் கெட்டவனாகினும் மானம் காத்து
உப்பிட்ட விசுவாசத்தில்
உடன்பிறந்தோரையும் எதிர்க்க துணிகிறேன்
உயிர் கொடுக்கும் நட்புக்காய்
பிறவி இது எனத் தெரிந்த பின்

உச்சி கொதிக்கும்
என் சூரியபொழுது தர்மத்தில்

தாயவள் வரம் கெஞ்ச....
வேடமிட்ட இந்திரன் கையேந்த
ராஜதந்திரி கண்ணன் சித்து விளையாட
சாபங்கள் அணிவகுக்க....
சல்லியனும் கைவிட.....

அநீதி வென்று நீதி ஜெயிக்க....

தர்மகுருதிகேட்டுவந்த கிருஷ்ண அவதாரம்
கண்டு ரசித்த..படி

பிறப்பிலே அறுத்தவள்
நடு களத்திலே மடியிட்டு

என் மகனே என
ஓலமேந்தி அழ

குருசேத்ர போரில்....பதினேழாம்நாள்
பின் பிறந்தோன்...தம்பியோன்
வில்லாளி அம்பினால் வீரமரணமேந்தி....
படைத்தவன் சொர்க்கமேறுகிறது என் ஜென்மம்..

மண்ணாள பிறந்தேனா..மடிசாய அழுதேனா
தர்மம் நாட்ட வளர்ந்தேனா தாய் குலபெருமை அழித்தேனா

என்னே என்பிறவி........

மா பாரதம் காக்க
மாபெரும்காவியமாய்
கண்ணனவன் லீலை செய்து
தர்மமது ஜெயித்து...

இலக்கியபூமி செழித்தோங்கி
மானிடம் வாழ் காலம்வரை

இவ் இதிகாச வரலாற்றில்..

இருக்கும் வரை

இல்லையென கொடுத்து

நட்புக்கென உயிர் காத்து நின்ற

கற்பு வழுவா என் பிறப்பும்
ஓர் கலப்பில்லா மைல்கல்லே...!!!!

நம்பிக்கைமனுஷிகள்

வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி – . 
மஸ்குலர் டிஸ்டிராஃபி (muscular dystrophy) 
என்கிற தசைச் சிதைவு நோய்க்கு ஆளானவர்கள்.

https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4&hd=1

உயிர் இருக்கிறது ..உணர்வு இருக்கிறது
எல்லாம் புரிகிறது எழுந்து நடமாட....நின்று செயலாற்ற
தனித்தெம்பில்லை...

அசைவுகள் கடக்க..அடுத்தவர் துணை வேண்டிய நிலை

சோர்வின் துயர்கள் விழி நிறைந்த போதும்
இயல்பு கடந்து சிரிக்கும் அசாதாரண மனுஷிகள்
கருணை மறந்த கடவுள் கொஞ்சம் அள்ளி தெளித்த
அமுத பிரசாதம் தன்னம்பிக்கை எனும் தும்பிக்கை
எதுவும் நம்மால் முடியாது என்று நம்பிக்கொண்டிருக்கும் போது

எதிர்பாரத எதோ ஒன்றின் இழப்பு..நம் சக்தியை வெளிக்கொண்டுவருவது போல்...இம் மனுஷிகளின் பேச்சும்
செய்லபடாநிலையில் வாழ்வின் மீது இவர்கள் கொள்ளும் நம்பிக்கையும்
வாழும் நாளில் ..வாழ்க்கை மீதான பிடிப்பை அதிகப் படுத்துகிறது

மனித பிறவியில்...அறிவோடு செயலோடு எத்தனை விஞ்ஞான வளர்ச்சியடைந்த பின்னும்...புதிராய் தோன்றும் மருந்தில்லா நோய்கள் தான் மறு சுழற்ச்சி படுத்துகிறது

எதை கொண்டு வந்து..எதை சேகரித்து..எதை விட்டு ..எதைக் கொண்டு போகப் போகிறோம்
முயன்று...இயன்றளவு உதவியளிப்போம்..நம்மால் முடிந்தளவு
இறைவன் விலக்கிய இவர்களின் சிகர முயற்சிக்கு

கடவுள் என தனியேது.....கருணையுள்ள மனிதம் அனைத்தும்
கடவுளே

இவர்களின் சேவைக்கு உதவ விரும்புவோருக்காக...
Aadhav Trust,
489-B, Bank Staff Colony,
Hasthampatty,
Salem – 636007,
Tamil Nadu, INDIA
வங்கி விவரம்
A/c Name : AADHAV TRUST
SB Ac No.: 1219101036462
Bank : CANARA BANK
Branch: Suramangalam
IFSC Code: CNRB0001219
MICR Code: 636015005

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

அன்பும் பாசமும்
அமைதியும் அடக்குமுமாய்
நிறைந்த ...மரியாதைக்குரிய

தோழமை நட்புக்கு பூமதி என்.கருணாநிதி
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சிலரைப் பார்த்தாலே ஓர் பிரியமான ஆளுமை சக்தி
நமையறியாமல் நமக்குள் ஆனந்தமாய் சூழ்ந்தாடும்
அத்தகைய உயர் சக்தி நீங்கள்
தெளிவான பதிவுகள்..கனிவான காலை வணக்கங்கள்
அழகாடும் புகைப்படங்கள்...எழிலாடும் குறும்புகள்
பாசமாடும் வார்த்தைகள்....

வாதடும் தொழிலில் ...நீதி வழங்கும் நிதானத்தில்
தினம் சுழலும் உங்களுக்கு
கோபம் எனும் சொல் அறிமுகமாகி இருக்குமா
எனச் சந்தேகமே கொள்ளவைக்கிறது
உங்கள் சாந்த முகம்

கருத்தோடு காரியம் யாவிலும் கைகொடுத்து
காதலாய் ஒருமித்தணைத்த கணவரோடும்

வம்சம்செழிக்க வாழைக்குருத்தாய் வேரிட்ட
பிள்ளைசெல்வங்களுடனும்

இனிமை செழுமையாய்...எல்லா நலங்களும்
வளங்களாய் பெற்று.....மங்கலப் பெருவாழ்வு வாழ்ந்து
தர்மதேவதையாய்...உலாவந்து உவகை சூடி

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மேடம்......

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

தேயிலைத் தளிர் பிஞ்சு

கள்ளமில்லா கனவுகள்

விளையாட்டாய்
விழி உறைந்து கிடக்கிறது

ஆவியாடி அவனி புதுப்பித்து
சரித்திர சிகரம் சமைக்கும்

தேயிலைத் தளிர் பிஞ்சுகளிடம்