Friday, 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-32


தேடித் தேடி
சேகரித்தேன்
உன்னை
எனக்குள்.....
தெரிந்தே
தொலைத்தேன்
என்னை....
உனக்குள்....
காதலின் வழி என்ன
இத்தனை வலியா....


மழைத்துளி மிச்சமாய்....
இரவுகளின் முத்தமாய்
இதழ்களில் .......
பகடையாடுகிறது
அதிகாலை பனித்துளி..!!!!!!


கண்ணீருக்குள்
மூழ்கடித்து...
நினைவுகளால்
சுவாசம் தருகிறாய்
பிரிவுக் காதலே.....


முகமறியா உன்னை
பூக்களாய் தீட்டி
சுற்றி சுற்றி
வருகிறது என்
பட்டாம் பூச்சி
காதல்


இப்படித்தான்
எனை மீறி
பொங்கிவிடுகிறது....
உன் சுவாசம்
தென்றல் தீண்டலில்
தூங்கிகொண்டிருக்கும்
என் காதல்.


உன் கால்
தொட்டு செல்லும்
அலை கூட.......
காதலாய் தான்
சுருண்டு மடிகிறது


என் உதிரக் குளத்துக்குள்
வந்து ஓசையில்லாமல்
உணர்வுக்கல் எறிந்து
செல்கிறது உன் ஓரவிழிப்பார்வை


உயிர் மை கொண்டு
உணர்விலைகளால்
எனை ....உன்னில்
தீட்டுகிறேனடி...கவிதையாய்


வயதுகள் கடந்து
உதிரும் என்னில்........
உயிர் பிடிப்பு தந்து
வாலிபமாய் வந்தமர்ந்த
காதல் நீயடி....


காதலே
உன்னில் தலைநீட்டி
குளிர் காய்கிறது
என் கோடை காலம்


உருவமறியா காதல்.....
பருவமறியாமல் வந்து
காயப்படுத்தி செல்கிறது
பக்குவமில்லாமல்
தனை ஏந்திக்கொள்ளும் கரங்களை.


வாலிப இசையாய்
வயது மறந்து
ஆடவைக்கிறது....
வருந்தி..வருந்தி
கிடைத்த வெற்றி.


குடை விரித்து
நாற்காலி போட்டு
காத்திருக்கிறது....
என் காதல்.....
புயலாய் நீ வந்து
புரியாத உலகுக்குள்
எனை இழுத்துச்செல்ல....


ஆறடி உயரத்தில்
ஆஜானுபாகுவான
எனை குழந்தையாக்கி
ஆளுமை செய்கிறது
உன் அன்பெனும் அங்குசம்.......


முகம் பிடித்து
கண்களில் தூசி
எடுக்கும் போதெல்லாம்
பட்டும் படாமல்..என்
இமைகளை..தெரிந்தே
தீண்டிச்செல்கிறது
உன் இதழ்கள்...

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..