Friday, 19 December 2014

நேசத்தின் காதல் துளிகள்-35

கை நீட்டு என்றாய்....ஆவலாய்
இரு கை ஏந்தினேன்..
விழிகளை மூடச் சொல்லி
ஒரு விரல் தீண்டலில்....
முழுவதுமாய் உன்னை
தந்து விட்டு செல்கிறாய்...


இசையோடு சுதி போல்
உன்னில் இணைந்தாடுகிறது
பிரம்மனின் திறமை
அழகெனும் ஆணவமாய்...


மலைப் பாம்பாய்.....
நகரும் இரவுகளில்......
சிறிது கண்ணீராய்.....
சிறிது காதலாய்
ஆங்காங்கே ஒளிர்கிறது
உன் பிரிவு.....


மொட்டு விரியாமல்
தேன் மறைத்து
பூத்திருக்கிறது
பருவத்தில்
இளமை....


நிம்மதி தேடும்
போதெல்லாம்
நட்பிலும் ..காதலிலும்
தோள் தேடுகிறது
அடிமையாய் கொடுத்த அன்பு.


தடுமாறாமல் நடக்க
எப்போதுமே எவரிடமாவது
ஆதரவு தேடுகிறது
தள்ளாமையும்...........
தனிமையும்....



உயிர் கசக்கி பிழிந்து
என்னை கருவறுத்த
காதலை....தக்கையால் அடைத்து
விட்டெறிந்தேன் கடலில்...
அலை ஒதுக்கத்தில்
நடைபழகிய கன்னி அவள்
விழியில் பட்டு.......
எனைப் படித்து.....
எனக்கு ரகசிய சினேகிதி ஆனாள்


உன் குறும்புகளை
நினைக்கும் போதெல்லாம்
விழி மூடி குழந்தையாய்
சிரிக்கிறது என் இரவு.


காதலின்
விற்பனைக்காக....
காதலர்கள்
வாங்குவதற்காக........
கடையெங்கும்
சிதறிக்கிடக்கிறது
கலர் கலராய் இதயம்.



உன் விருப்பம் போல்
வளைத்து வளைத்து
பின்னுகிறாய்.....உன்னில்
காதலாய் சிக்கிக் கொண்ட என்னை..



எவ்வளவு தான்
மறக்க முயன்றாலும்
முடியாமல்...நம்மில்...........
துரோகமாய் போன
அன்பில் தான்
சறுக்கி சறுக்கி விழுகிறோம்
மறுபடி மறுபடி......ஏன் இப்படி ..ஏன் இப்படி
என்ற கேள்விகளுடன்..


எச்சில் பதிய
நீ கொடுத்த
அன்பு முத்தங்களை
மிச்சமில்லாமல்...
மொத்தமாய்.....
உனக்கே வழங்குகிறேன் தாயே
வயது மூத்து.....
நீ எனக்கு
குழந்தையாகும் போது


நிமிடங்கள் தோறும்
உன் வரவு பார்த்து
காத்திருக்கிறது....
இற்றுப் போன
சட்டத்துக்குள்
பொலிவு மாறாத
ஓவியமாய்....
என் காதல்



நீ அதீத அன்பாய்
இருக்கும் போதெல்லாம்
நான் அழகாய்
இருப்பதாய் சொல்லி
இரு கன்னம் இழுத்து
கொஞ்சிச் செல்கிறாய்
காதலே..


புதிய மனிதரை பார்க்கும் போதெல்லாம்...
மிரட்சியுடனும்
வெட்கத்துடனும்
தாய் தந்தை பின்
ஒளியும் குழந்தை போல்
உன்னை பார்த்த
முதல் பார்வையில்
என் காதல்

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..