Monday, 26 January 2015

துள்ளுது ஈரமனம் ...

இருள் திரட்டும்
மப்பு மந்தார மேகமும்

இமைபிரிய மறுக்கும்
அதிகாலை தூக்கப் பனியும்

கூதலணைக்கும் போதெல்லாம்
குழந்தையெனவே

குதிகால் தூக்கி

துள்ளுது ஈரமனம் ...

பாரத்மாதா ஹி...ஜே....


செங்கதிரோன் மண்ணுதிக்க
செழுமை வேள்வியாய்
குவிந்தோங்கிய பொன் பூமியில்
முடியாட்சி தலையெடுத்து
முதுமை தொன்மையாய்...முகிழ்வு ஆள

மானுட சுழற்சி கால அச்சேறி
மனிதப் பகை மேலோங்க
மன்னராட்சி ஆட்டம் கண்டு
மாற்றான் உள்நுழைந்து
அடிமைச்சங்கிலி கொண்டு எம் மனிதன் கையிறுக்க

தன் மக்கள் துயர் கண்டு தான் ஓலமிடும்
பாரத தாய்மையை...வெட்ட வந்தவன் வேள் தடுக்க
தீபகற்பமெங்கும் ..தீக்கனல் முளைத்து

செங்குருதி சாய்த்து தன் தாயவள் மானம் காக்க

இருள் விலகிய ஒரு நாளில்..இந்தா எனக் கொடுத்து
ஓடி...நரிக்கூட்டம் விலகித்தெறிக்க

செம்பவள முந்தானையில்..வெண் உப்புவியர்வை துடைத்து
கருநீல சக்கரத்துடன்...பசுமை சேலை கட்டி

பாங்காய் கொடியேறினாள் ..எம் அரங்கேற்றத்தாய்மை

நீயே மக்கள்..நீயே மன்னன்..இஃதே உன் இந்தியா
என..இடம் பிரித்தும் கொடுத்தாள்..
சட்டமாய் திட்டம் வகுத்து....

தாய் தந்த வழியை..பின்பற்றி மூத்த தலைமகனாம்
முதல் குடிமகனார்...........

இன்று முதலாய் அவளுக்கு அலங்காரஆடைகட்டி
வானுயரம் ஏற்ற...

நாடெங்கும்..பட்டொளி வீசி பறக்கிறது ஆனந்த சந்தோஷமாய்

ரத்தம் சிந்தைய பெருமகன்களின்..நிம்மதி சுவாசம்

எவரையும் எதிர்த்து கேள்வி கேட்கும்
கூன் நிமிர்த்திய சுதந்திரமாய்...

பொய்மை போட்டி பகைவிலக்கி...தாய்மையாய் அவளை
வேற்றுமை கையிணைத்து..ஒத்த மன சிந்தனையுடன்

மனிதம் மாட்சிமை சக்தியாய்..கொண்டாடி கூத்தாடி
சாத்வீகம் காப்போம்..வீரத் தோழமைகளே.....

பாரத்மாதா ஹி...ஜே...........ஜெய்ஹிந்த்...!!!!!!!!!!!!!!!!!!!! —

சுதந்திர தேவியே போற்றி

ஆனந்த வேள்வியாய் வந்த
சுதந்திர தேவியே போற்றி

அகிலம் காக்க வந்த
அன்னையெனும் குடியரசே போற்றி

மனம் விரியும் நிம்மதி சந்தோஷ..
தாய்மை தாயகத்தின் பிரதிநிதியே ...போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!!!

காத்திருக்கிறேன்.............வா

நினைத்து தவிப்பதாய்
உருகி துடிக்கும்

என் அணுச்செல்களில்
நீக்கமற நிறைந்த

என்னை விட எனக்கு
அதிமுக்கியமானவளே

வேள்வியென வந்த பின்
வெம்மை என ....இட்ட
கோடு தாண்டலாமா

அழுகை சிரிப்பு
முத்த அணைப்பெனும்
உணர்வெல்லைகளின்
வார்த்தையாடல்கள் களைந்து

உனக்கென துடிப்பவளிடம்
உள் மறைத்தல்கள் உதறி விரை

மாசற்ற அன்புவெளியில்
ஏகாந்த உயிர்ப்பேந்தி

காத்திருக்கிறேன்.............வா


பவித்ர பாசங்கள்

அம்மா அப்பா மகளென
அண்ணை தங்கை தம்பியாகி
உறவு சூடி வரும்

உதிரம் பகிரா
தோழன் தோழிகளில்

இமையணைக்கும்
மாசற்ற
பவித்ர பாசங்கள்
யாவும்

மறுபிறவியென வந்த
தாய்மையே

முள் முருங்கை

ஓரப்பார்வை
விதைக்கிறாயடி

இரவுத் தோட்டமெங்கும்
கூர் நீள்கிறது

படுக்கை குத்தும்
முள் முருங்கை

மனக்குருடுகள்

நித்தம் பேசுவதிலும்
நெருங்கி கட்டி
சிரிப்பதிலும்

உயிரெனும்
அங்க உறுப்பாய்
உருமாறும் வார்த்தையிலுமே

நேர்மையெனும் அன்பு
நங்கூரமிடுவதாய்

நம்பிக்கையாடுகிறது

கிடைத்து தொலைத்து
தேடிச் சலிப்பதாய்
விலகித்தெறிக்கும்

சில
மனக்குருடுகள்

இனிப்பு கடிகள்

வலிக்க வலிக்க
சுகம் சுவைக்கிறது

கரும்பு பிள்ளையின்
இனிப்பு கடிகள்

தவமாய் வந்த வேதப் பிரியமே


அன்பின் தவமாய் வந்த வேதப் பிரியமே

பாச ஆட்சிமை செய்யும் பவித்ர நேசமே

சூட்சம வாழ்வளிக்கும் வசந்த ஆளுமையே

எதுவந்து எதுபோன போதும் சுற்றும் பாதுகாப்பாய்
உடன் சூழும் வேள்வியே

அன்னை என மடிகிடத்தி மனது ஆறுதளிக்கும்
நம்பிக்கைநலமே

சரணம் சரணம் என்றும் நின் திருவடி பரிபூரண சரணம் பரமமே

ஓம் மாத்ரேய நமஹ ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!


வாழ்ந்த பெருமை சொல்லிவாழ்ந்த பெருமை சொல்லி
வடியாத கண்ணீர் துடைத்து
ஊர் கூடி
ஒப்பாரி வைத்து

கொட்டு மேளத்துடன்
கோடிதுணிபோட்டு

ராட்டினப் பூ சப்பரம் கட்டி
தெருவெங்கும் மணக்க அனுப்பி
குழியேத்தி

பத்தாம் நாள் கறிச்சோறு போட்டு
கழுவித்துடைத்த திண்ணையில்

இன்னமும் அமர்ந்திருக்கிறாள்
கல்யாணச்சாவு அப்பத்தா

கடக்கும் போதெல்லாம்
வெத்தலை இடித்துக் கொண்டு


ரோசாப்பூ நேசக்காரி

திமிர்நிமிர்
மொட்டுகளுடனும்

திமிரா வளைநெளி
காம்புகளுடனும்

மூச்சுமுட்டும்
ஏக்கம் தந்தே

பட்டு இதழ்
முத்த சூல் ஒளிக்கிறாள்

பருவக்கோப
ரோசாப்பூ நேசக்காரி

சிவக்க மெல்லும்

கொழுந்து கிள்ளி
கொட்டபாக்கு வைத்து
வெள்ளைச்சுண்ணாம்புடன்
வெள் ஆவியாய்
வேக வைக்கிறது

சிவந்த என்னை
சிவக்க மெல்லும்
முரட்டு மாமனின்
கள்ளக் கண்ணடிப்பு

வெல்ல முடியா தாய்மை

வலியில்லை
பதறாதே

பசியில்லை
படுத்தாதே

தளரவில்லை
தவிக்காதே

சோர்வில்லை
தைரியமிருக்கிறேன்
பயப்படாதே

என

இல்லையென்று
பிள்ளை மொழிந்தாலும்

இமையணைத்து
கலங்கித் தான் துடிக்கிறது

சுற்றும் குழவி
கொட்டுமோ..எனும்
வேதனை நினைவை

வெல்ல முடியா தாய்மை


கண்ணாம்மூச்சாடும் முதுமையில்

தொட்ட போதெல்லாம்
தொட்டுத்தள்ளி

தொடுதல் வெட்கம் பூக்க
தொடாததூரம் எட்டி நின்று..விழி
தொட்டு விரதம் முடித்தவள்

தொட்டு தொட்டு
தொட்ட பிடி விடாமல்

இருக்கி பிடித்தே நடக்கிறாள்

நான் முந்தியா
அவள் முந்தியா...என
மூச்சு கண்ணாம்மூச்சாடும்
முதுமையில்

நொடிப் பெருவலி

வடிந்தவயிறு தாயையும்
பனிக்குட பிசுபிசுப்பு சேயையும்

மகிழ்வோடு பார்க்கையில்

ஓசையில்லாமல்
உள்கடந்து போகிறது

பிரசவநொடிப் பெருவலி

புஷ்பாஞ்சலி*


சுற்றும் தீவினைகள் விலக்கும் விடியலுக்கு
ஆழ்சிவப்பு மலர்கள் சமர்ப்பணம்

நன்மையென வந்து நலம்பயக்கும் நம்பிக்கைக்கு
மஞ்சள் மலர்கள் சமர்ப்பணம்

தூய்மை நேர்மையாய் மனம் நிறையும் மகத்துவத்திற்கு
வெள்ளைநிற மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

சிறு கோழிகுஞ்சு

சிறு கோழிகுஞ்சு போதும்

சிறுவர்களின்
அழுகை தூரப் புன்னகையை..
மீட்டு
அருகில் கொண்டு வர..

அவளெனும் ஏகாந்த வெளியில்

சந்தோச நுன்மைகள் குழைத்து
சங்கீத மென்மைகள் வார்த்து

இயல்பெனும் இயற்கை விஞ்சி
சுவாச நொடியெங்கும் இன்பம் நுகரும்

அவளெனும் ஏகாந்த வெளியில்
அவள் மறந்து
அவள் பறக்க

எவர் அனுமதி சிறகும்
அவளுக்கு
தேவையில்லை


வசந்த மர வாசனை

கிளை பழுத்து
கழன்ற சருகிலை

காற்றுவழி நாடோடியாகி
நூலாம்படை கூடாரமிட்டு
தேங்கி சொல்கிறது

வசமாய்..வம்சம் வாழ்ந்த
வசந்த மர வாசனையை...

காப்பியங்களில் மட்டும் கற்பியல் வாழும்...

ஸ்ரீ ராமன் வருவான்
வில் ஒடித்து
மாலையிட்டு
சிந்தையெங்கும்
தனை மட்டுமே நிறைப்பான்

தன் சொல் நாயகன்
ஒருமவுன அமைதியில்
பழிச்சொல் தீண்ட
பாழ்மேனி எரிக்கும்

வரமேந்தும் சீதை தவங்களாய்

ஒழுக்க வேள்வியேந்தி
ஒருத்தி மட்டும் மனதிற்கொண்டு
அன்னைவார்த்தை மதித்து
அடர்ந்த காடுசென்று
அறுவரென குகனோடுஆகி
அணில்பிள்ளை கோடிட்ட
ராம வரங்களாய்

பிறவியெடுக்கும் மானுடம்

திரேதா யுகத்தோடு
தீர்ந்துவிட்டது.....

காப்பியங்களில் மட்டும்
கற்பியல் வாழும்

கலியுகத்தில்..........

எங்கள் மீசைத் திமிரோன்

விதைநெல்லாய் வந்து
விடுதலையை
அறுவடை செய்த
வீரவிளைநிலம்...

அணுக் குஞ்சுக்குள்
அக்னி வளர்த்து

பாதக மனிதரை
மோதி மிதித்து..காறி உமிழ
பாப்பா பாட்டு
சொல்லி கொடுத்த

எங்கள் மீசைத் திமிரோன்

Mother

அனைத்துமாகி நிறைந்த

ஆதூரமானவளே.....

நன்றி

பருவத் திண்ணையில்

எட்டுபுள்ளி கோலத்தை
தப்பில்லாம போட்டு

குழம்பு கொட்டிவைத்த உப்பை
சமாளிக்க சொல்லி கொடுத்து

அதிகாலைமுதல்
நடுசாமம் வரை....

வேலைகளூடே
வெட்டிகதையளந்து
உலகசெய்தி வாசிக்கும்
அம்சு அக்காவும்

மறுவீடு சென்ற பின்னும்
மறக்க முடியா
அங்கமாகிப்போகிறாள்

பவளக்கொடியின்
பருவத் திண்ணையில்

ஈரப் பிரிவு

அழுக அழுக
சுகம் தருகிறது

அவன்
தனிமை தரும்
ஈரப் பிரிவு

தங்கபூக் குவியல்

சப்தஸ்வரமீட்டி
செல்லமகன்
மேல் துயில்கிறான்

வலித்த தசை
அசையாமல்
கிடக்கிறது

தங்கபூக் குவியல்
தாங்கும் தாய்மை மேனி

புஷ்பாஞ்சலி*

யோகசித்திநிறை பரம் பொருளுக்கு
டேலியா மலர்கள் சமர்ப்பணம்

நிர்மல மனம் தரும் நிம்மதிகளுக்கு
நித்தியகல்யாணி மலர்கள் சமர்ப்பணம்

சிறு ஒளியிழையால்...இமைகோதி வெளிச்சமிட்டு
அவமானங்களை வெகுமானங்களாய் மாற்றும்
மகத்துவ பிரியத்திற்கு மகிழம் மலர்கள் சமர்ப்பணம்

ஓம் மாத்ரேய நமஹ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!

அச்சார மல்லிப் பூ

மையிட்ட எழிலாள்
மாதவி ஒயிலாள்
மச்ச விழியாள்
மாங்கனி சுவையாள்
மங்கலப் பிரியாள்
மாலை தொடுக்க

விரல் பட்டு
விரதம் முறிய

செடிவிட்டு கழல்கிறது

ஆசைமச்சான் தோட்ட
அச்சார மல்லிப் பூ

உணவுக் கெழுத்தி

பசிக்கும் போதெல்லாம்
எழுதி ருசிக்கிறேனடி

உணவுக் கெழுத்தி
உன் பெயரை

மெழுகுக்கு மறுபெயர்

எரியும் பிறவியாய்
உருகும் மெழுகுக்கு
மறுபெயர்

மாதக்கடைசியில்
வாங்கலாம் வாங்கலாம்
என்றே

பிள்ளைகளிடம்
பொய்சொல்லி பொசுங்கும்
நடுத்தர
குடும்ப தலைவர்

மேன்மை ஏகாந்தம்

ஆத்ம சக்கரம் ஏழும்

உள்சுழன்று
உயிர் இசை கேட்க
உலகின் ஓசை விலக்கி
அங்குசமிடுகிறது

மென்மை தியானமெனும்
மேன்மை ஏகாந்தம்

உலை உணர்வுகள்

பேசாதே என்ற
பின் தான்

அவனைப் பற்றி
அதிகம் பேசி கொல்கின்றன

உச்சி தொடர் பாதமாய்
உள்ளம்கொதிக்கும்
உலை உணர்வுகள்

Wednesday, 21 January 2015

வேத சுகந்தகளே போற்றி

மலர் மணமாய் மனது நிறையும்
வேத சுகந்தகளே போற்றி

மாசில்லா சிந்தனைகள் தரும்
மகத்துவ தூய்மையே போற்றி

விசால மனம் தந்து ஏகாந்தமாய் கடத்தும்
ஆனந்த கடத்தியே

அன்புநிறைவேள்வியே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!!

விழி அறியும்

இழந்த பின்
தான்

விழி அறியும்

அம்மா இமையின்
அருமை

தமிழச்சியானால்எந்த நாட்டு மகளிரும்
உடனே
உலக அழகி ஆகின்றனர்

எம் நாட்டு
தமிழச்சியானால்

மழலை மழை

விழித்த விழி முன்னே
நிகழ்வாய்
வாடிக் கொண்டிருக்கும்

நிம்மதி தளிர்களை
சிறு புன்னகை சாரலில்
சிலிர்த்தெழ வைக்கிறாள்

மழலை மழை

விபூதிநிறை பூசாரி

எலுமிச்சை வேலுடன்
சந்தன மார் ..விபூதிநிறை
பூசாரி

சிரிப்பாய்
நினைவுறுத்துகிறார்

உறைந்த விழி..
நிறைந்து பயந்த
பால்யத்தை

ஆனந்த அன்பாடும் அணில் பிள்ளையென

பிடித்தது எல்லாம்
பிடித்தமாய் செய்து
பிடித்த பித்தோடு
பிணை காத்திருந்தேன்

கருவோடு ஏந்தி
கண்ணோடு நிறைத்தவள்
காகமென வருவாளென

அமுதூட்டியவளுக்கு
அன்னமிட்டு

மென்மை ஏந்திய
மேன்மை பிறவியவள்

சின்ன நடை போட்டு
சிங்கார கண்சிமிட்டி
குடுகுடுவென வந்து
செல்லப் பிரியம் கொறித்தாள்

ஆனந்த அன்பாடும்
அணில் பிள்ளையென

கமலசெவ்விதழ்

காம்பிதழ் கழன்ற
கமலசெவ்விதழ் நிறை
வியர்வை சொல்கிறது

இலைஇடை உருண்டோட
இரவு வந்த..நிலவவன்
இமைக்க விடாமல்
இட்டுசென்ற

இளமை பனி
ஈர பிரியங்களை

அக கையேந்த

அறியாமையிலேயே
சிலதை
அன்பழைத்து
அக கையேந்த

அருகே வந்து

நிரூபித்து செல்கிறது

தான் அதற்கு
தகுதியில்லையென்று

நீ எனும் நினைவு போதும்

முகம் பார்க்க
முழுவரி பேச
முத்தமிட்டு கொஞ்ச
முகவரிதேட

முழுமதி நீ அருகே
வேண்டாமடி

நீ எனும் நினைவு போதும்
கனவணைத்து
நான் நிம்மதியுறங்க

ஆயுள் தோழன்என்னை போல்
அவன் செய்வதால்

அவன் அருகமையில்
நான் மகிழ்வதால்

அவன் என்
ஆயுள் தோழன்

உயிர் காத்திருப்பில்

நினைக்கும் போதெல்லாம்
நெகிழும் மனதை

இறுக்கி கட்டி
வைக்கிறேனடி

நிழல் விலக்கி
நிஜம் நீ வருவாய்

எனும்
உயிர் காத்திருப்பில்

ஆண்மையில் நீ கலந்துள்ள ஆளுமை

இமை விட்டு போகதே
உயிரே என
இதயம்
ஊமையாய் கதறும்
போது தான் தெரிகிறதடி

என் ஆண்மையில்
நீ கலந்துள்ள ஆளுமை

பசித்தீ க்கு ஒத்தடம்

கரைச்சுகுடிக்க
கஞ்சியில்லாத போது

கையேந்தாத கவுரதி
காத்து

அன்ன லட்சுமியின்
பசித்தீ க்கு
ஒத்தடம் கொடுக்கிறது

நிலம்சூழ் கடலாய் நிறைந்த
பூமிச்சூல் சுனைநீர்


Monday, 19 January 2015

சத்திய மலரடியே சரணம்


நித்திய அருள்தரும் சத்திய மலரடியே சரணம்
நிதர்சன வாழ்வு தரும் தாயின் மலரடியே சரணம்
நிர்மல மனம் தரும் தேவியுன் மலரடியே சரணம்
நிம்மதி பிரியம் தரும் அன்னை மலரடியே சரணம்

கதியென்று வந்து உடன் சரணடைய
உயிர் காக்கும் வேதமே

கருவென வந்து நிறையும் கலைதேவ பிரியமே

சரணம் சரணம் நின் மலரடி பூரணசரணம் அம்மா..!!!!!!!

ஓம் மாத்ரேய நமஹ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

ஆகச்சிறந்த காதலிகள்

ஆகச்சிறந்த காதலிகள்
பெரும்பாலும்

அடுத்தவரின்
மனைவியாகவே 
இருக்கிறார்கள்

முத்துபிள்ளை கர்ப்பம்

சுட்ட பழம்
இட்ட வடுவென

நினைத்து மறுகும்
ஏக்கமாய்

வாந்தி மயக்கம் தந்து
கருவோடு நிறைந்த
கானல் நீராகிப் போகிறது

முத்துபிள்ளை கர்ப்பம்

அனுபவ முதுமை மரங்கள்

துளிர்த்த இலை
காம்பு பழுத்து
கிளை உதறிய போதும்

ஆணிவேரின்
உறுதியிலேயே
ஆளுயர்ந்து நிற்கிறது

அயல்நாடு மகன் செல்ல
அவதானிப்பார் அற்ற
அனுபவ முதுமை மரங்கள்


என் கதிர் அவனே


என் கதிர் அவனே

விடியல் உன்
நம்பிக்கையில்

விழித்த இரவுகள்
அணைக்கிறதடா

என் நிம்மதி மழலை

உப்பளம் நிறை... துவர்ப்பு

எண்சான் உடம்பு
எலும்பு தோல்
உழைப்பாளி வியர்வையில்
வெண்குருதியாய்
வழிந்து கிடக்கிறது

ஓர் உப்பளம் நிறை... துவர்ப்பு