Saturday 18 March 2017

அடைசல்பிரியம்



அன்றைய நாளின் விடியல்
மழை சூடியிருந்தது
இமை திறக்கவிடாமல்
நாசிகோதியது மண்வாசம்
எழமுடியாதபடி இறுக்கமான 
அணைப்புக்குள் கனந்திருந்தேன்
அசைவு கண்டு 
இடைவிடாத முத்தங்களால் 
நெகிழும் 
இடைவெளி நிரப்பிக் கொண்டிருந்தாய்
துவள துவள நழுவும் விரல்பற்றி
வெகுதூரம் நடத்தி சென்றிருந்தாய்
பிரியத்தின் விளிம்பு நுனியில் நின்று 
விழி பருகி கொண்டிருந்தோம்
சுண்டுவிரல் இடறினால் சுவடின்றி
தொலையும் அபாயத்திலும்

வெகுநாட்களுக்கு பின் 
அடைசல்பிரியங்களுள் சிக்கிய மனம்
அடம்பிடித்தது..... வெகுநேரம்

கனவுப்பாதையிலிருந்து
இயல்பு திரும்ப






எவரையும் எதிர்பாராமல்
ஓடிக்கொண்டிருந்தது நிமிடம்.
யார் பேச்சையும் கேட்காமல் 
இலையசைத்துக் கொண்டிருந்தது 
காற்று 
நடுவான் நகர்ந்து அந்தி நோக்கி
பயணித்திருந்தான் பகலவன்....
பசி மறந்து 
கடல்நோக்கி காத்திருந்தன
கன்னியப்பன் வளர்புறாக்கள்
தூரத்து வெடியோசை
பட்டாசாய் கேட்டது
வேகமாக ஓடி வந்த பேரலையில்
ஒப்பாரி நுரை கசிந்திருந்தது

சேதியறியாத கன்னியம்மா
கை தவறி
நிலங் கவிழ்ந்தது
நெத்திக் குங்குமம்