Tuesday, 30 June 2015


நட்சத்திர மூக்குத்தி

ஒளிரும் உன்
விழி நிலவுக்கு
காவல்

கண்ணடிக்கும்
கல்
நட்சத்திர மூக்குத்தி

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே

நேச விதைநெல்லெடுத்து
நெகிழ்ந்த பிரியங்கள் கோர்த்து

நெஞ்சுநிறை அன்பேந்தி
அன்றில்பறவை விருப்பங்களுடன்

காதல் மனமணைத்து

ஆனந்த மணநாள் கண்டு
மகிழ்வுறும் ...அன்பிற்கினிய மணமக்களே

அன்புத்தோழியர் Poomalai Haldoraiஅவர்தம்
இளைய மகன்&மருமகளே

அழகும் அழகும் ஆலிலையில் பிரியமேந்தி
ஆண்டவன் இட்ட உயிர்முடிச்சாய்
அமிர்தவாழ்வு காணும்..நீங்கள்

வாழ்வெனும் வசந்தவான் பிரியத்தில்
வண்ணமிகு வானவில்லாய்...ஒருவருக்கொருவர்
வளைநாண் வளைந்து

விட்டுக் கொடுத்தலில் வீடுபேறு கண்டு
எண்ணம் செயல்சிந்தைகளில்
ஒத்த கருத்தினிமையாய் கைகோர்த்து

மங்கல செழுமைகளை மகிழம்பூ மணமாய்
வரும் வாழ்வுதடமெங்கும் தளிர்பூ பரப்பி

பதினாறுவகை பேறுடன்.....
வாழையடி வம்சக் குருத்துக்கள் கண்டு

வானத்து தெய்வங்கள் போட்டிபோட்டு ஆசீர்வதிக்க
தேவாதி தேவர்கள் பன்னீர் மழைத்தூவ
தேவதைக் கொஞ்சலுடன் ..தித்திக்கும் மனமேந்தி
தெவிட்டாத வசந்தவாழ்வு வாழ

நான் வணங்கும் அன்னை வணங்கி

அல்லிமலர்செண்டெடுத்து..
அறுவகை நறுமண மலர் நிறைத்து
ஆனந்த மனம் கொண்டு

கவிநிறை மொழி தொடுத்து வாழ்த்துகிறேன்

வாழ்க வாழிய மணமக்கள் வாழிய வாழிய

ஆயிரம் பிறைகண்ட ..அற்புத பெருவாழ்வு

இனிய வாழ்த்துக்கள் ..இளம்குருத்துகளே
 — with Poomalai Haldorai.

ஆயுள் சுமைதாங்கி

மனைவி மக்களின்
சின்ன சின்ன
ஆசைகள் கூட

சிரமமேற்றே
நிறைவேத்தி
வைக்கப்படுகிறது

நடுத்தர வருமான

ஆயுள் சுமைதாங்கி
தகப்பனால்

குழந்தை

தட்டான் பூச்சியை
எப்படி பிடிப்பது என்று

தந்தை கற்றுத்தருகிறார்

எப்படி பறக்க விடுவது
சொல்லித்தருகிறது

குழந்தை

புஷ்பாஞ்சலி


ஆதித்த தேவமையின் அன்பு திருப்பாதங்களில்
அழகு செவ்வரளி சமர்ப்பணம்

ஆன்ம முன்னேற்றம் தரும் பாசத்திருப்பாதங்களில்
அடுக்கு செம்பருத்தி சமர்ப்பணம்

ஒருநிலைபடுத்தி ஒருமுகம் மனம் தரும்
ஒப்பில்லா மாணிக்க பாதங்களில்
நாவிதழ்நல்மன மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே.!!!


உணர்வாளுமையே

உயிரே
உயிராய் நீ
உயிர் சேர

உடல்தீண்டா
விழிக் கலப்பினம்
போதுமடி

உணர்வாளுமையே

அடையாள பொக்கிஷமாய்

ஆகாஷ வாணி
களிமண் மக்கு
காந்தி மூக்கு கண்ணாடி
பாதி விரித்த புத்தகம்

இறந்தாலும் உடனிருக்கிறார்

இறவாத
அடையாள பொக்கிஷமாய்

தியாகி தாத்தா

கலை மிகு குறள்கவியமுதம்

அற்புதம் அற்புதம்
அகர அற்புதத்தில் ஒரு
அமுத சொற்பதம்........

திருக்குறள் தழுவிய

கலை மிகு குறள்கவியமுதம்

வந்த துயர் விலக்கி
வாட்டிய துயர் தவிர்த்து
வசந்த முத்து மொழி தொடுத்து
வாசனை மாலையாய்
அய்யன் வள்ளுவனுகோர்
அடர்செறிவு சொல்கவி சிகரம் அமைத்து

எதுவும் தனதில்லை
எல்லாம் இறைக்கே
என்னுயிர் அய்யனுக்கே
என்னுயர்வும் அய்யனுக்கே

என்றேறி ...இன்று இளைப்பாறும்
அன்னையே .........அன்னைமொழியே

என்னே சொல்லி நின்னை நான் வணங்க....

திரும்பிப் பார்க்கிறேன்
தித்திக்க திகட்டாமல்
தாங்கள் செழுமை செய்தேறிய
சிகரப் பாதையை

முப்பத்தின் மூன்று ஆண்டுக் கனவாய்
மனதில் விதையேறிய விருட்சத்தை
மகிழ்வென பதியமிட....
மருந்தென அடைகாத்து

மா திரு காலம் வர

முளைகட்டிய சொல்லெடுத்து
காத்திருந்த கருநிறையே
எண்ணியசெயலை திண்ணியவாறே
முடித்து நிற்கும் திமிர் உரையே

சுற்றிப் பகை சுற்றமெனவே வந்து
சுற்றியபோதும்

வளர்த்த நன்றியின்றி
உதவிபெற்ற பைரவமே
எட்டி தூரோகம் இழைத்த போதும்

இனப்பிரிவு மாயை
இச்சாதாரியாய் மொழிக்கொடுக்கிட்டு
சீண்டிய போதும்

மனிதன் நெருங்கும்
முப்பெரும் தீமையை
மூவாசைக்கொடுமையை

எல்லாம் எதிர்த்து ...
ஏறி சிம்மாசனமிட்டு
என் அன்னை மொழியே
நீயின்றி எதுவும் என் உயிரில்லை
என்றே நேசித்து,....

உணர்ந்து உருகி
உள்சென்று தொழுது
உவகையாய் எழுந்து
உயர்திரு தருவாக்கிய
உயர்நிறை அறிவே

அண்ணனெனும் ஆசானே

கட்டமைத்த கட்டிடத்தை
எடுத்துரைத்து
தட்டிப் பார்த்து மொழி சொல்ல
சிறுபிள்ளை சொல்லெடுத்து
சித்தாள்கள் பலர் வந்த போதும்

சொல்லும் மொழியும்
சொல்லவந்தோர் கருத்தும்
எனக்கோர் ஆசானே

என்றினும் பொறுமையாய்
நின்றெனத் தாங்கி
நின் பெருமைவராது
நிலப் பொறுமை தாங்கிய தங்க மகனாரே

என்னே தவம் செய்தாள்
தமிழன்னை உன்னை தன் மகனாய் மடிதாங்க

உலகப் பொதுமறைக்கோர்
உவகை கவி மறை எழுதி

சிகரம் எழுந்த சீர் மொழியெ

முப்பாலை அமிழ்தென கரைத்து
ஆயுள்செழிக்க நீர் தர

சொட்டும் தேனை
சொட்டுவிடாமல் பருக முடியாமலே
கருத்து மொழியிடாமல்
திணறி ஆயுள் குறைத்தேன் நான்

ஈரடித் தமிழில்
வாழும் ஆறடித் தமிழாய்
சான்றோன் ....உம்மைக் கண்டேன்

சொல்லும் மொழியும்
உம்மையே கண்முன் நிறுத்தியது
அறம் பொருளென ..அமைச்சு குடிமக்கள்
காக்கும் மன்னன் வளமையில்

கொஞ்சும் மொழியும்
கொழுந்து கனிவும்
சிலேடை வம்பும்
சிணுங்கும் சொல்லும்

இன்னும் இளம் வயதே நீர் என
நின் மொழி
அடையாளமிட்டது

மொழி கண்டவர் வியப்பில் ஆள
மொழி ஆள முடியாதவர் பொறாமை துயில

பொல்லாங்கு செய்தவரையும் பொறுக்கும் நிலமாய்
நிகழ்தாங்கி உருஎழுந்து
உயரம் காட்டிய

உயர்பெருமைதிமிர் மலையே

என் தமையனெனும்
பிரமாண்டபெருந்தன்மையே

என்றும் நின் மொழி விரல் பிடித்து நடந்து
நின்மொழிக் குடை கீழ்
இளைபாறி பெருமிதம் கொள்கிறேன்

நெஞ்சார்ந்த மகிழ்வை
என் சொல் ..என்ன சொல்லெடுத்து
நான் சொல்லினும்

விழியோரம் துளிர்க்கும்
ஆனந்த கண்னீரையும்
மனமெங்கும் நிறையும்
மத்தாப்பு மகிழ்வு நிம்மதியையும்

சொல்ல எனக்கோர் மொழி இங்கேது

கல்வெட்டு சாதனை என் ஆசான் செய்து
காலம் வென்று
இதோ இவ்வள்ளுவர் சிலை இணையாய்
இந்த வள்ளலார் ..சொல் ஆள

ஈராயிரம் ஆண்டு கடந்தும் வாழும்
இன்பக் காட்சி விழி நிறைய

வழியும் கண்ணீர் ...வழிய விட்டு

வணங்குகிறேன் மொழிச் சிகரமே

வாழிய தமிழ் மகனார்...வாழும் உயிரகள் வாழ்வணைத்தும் தனதாக்கி

இனிய வணக்கங்கள் ஆசானே

அருள்நிறை அன்புதவங்களே


அருள்நிறை அன்புதவங்களே
ஆனந்த சரணம்
ஆனந்த உரை மொழி
செழுமைநிகர்களே சரணம்

செய்யும் செயல் சிறக்க
துணவரும் வசந்தங்களே சரணம்

வெற்றி வாழ்வு தந்து
சுற்றி சூழும் பாதுகாப்பே

என்றும் நின் பாதங்கள் சரணம் சரணம்
பரிபூரண ஆனந்த சரணம் பவித்திரங்களே

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!

முத்த மழை


தாகம் நீ தருவாய்
என்றே

தாப மொழி
சொல்கிறதடி

பட்டு உன் மேனி மேல்
பட்டுத் தெறிக்கும்

முத்த மழை

பயணப் பறவையேஇரும்பென அமர்ந்து
இயல்பென கடந்தே

இதயம் வெட்டி
பறக்கிறாய்...

பயணப் பறவையே

மைனாப்பேரழகே...

உடன் மேல்
உரிமையமர்ந்து
உதிரம் உறிஞ்சும்
உண்ணியெடுத்து
உயிர்நோவு தீர்க்கிறாய்

இறகுவலிக்க..வரும் உனக்கு
இளைப்பாற...கொழு எலும்பு தருகிறேன்

என்
இனமில்லாத நீயும்
இணைத்தோழமை
உறவு கொத்தி தானடி

மையலின மைனாப்பேரழகே...!!

மவுனத்தின் மணமாய்.

புத்தரின் கையில் பூ

பலருக்கு பக்தியாய்....
சிலருக்கு திவ்யமாய்...

சிலருக்கு நிசப்தமாய்...

எனக்கு மட்டும்
எப்போதும்

அவளின்...
மவுனத்தின் மணமாய்.....

அதி மன ஒளியே

ஸ்தூல ஜீவனே
அதி மன ஒளியே

ஆற்றல் தரும் ஆத்மமே
ஆருயிர் பிரிய வேதமே

எடுத்த காரியம் முடித்த திறம் தந்து முன்னேற்ற வெற்றியளித்த நிறையே

என் அன்னை அரவிந்தமென்ற ஆனந்த சாகரமே

என்றும் நின் பொற்பாதங்களில் ..பெருமித
மனம் கனிந்த கண்ணீர் நன்றி பூக்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைத்தன்ய மயி சத்யமயி பரமே.!!!

ஒட்டுபுல் பார்வை..வேண்டாமென
விலகி ஓடினாலும்
விடாமல் மேல் படிந்து

வியர்வை முத்தாய்
குத்துகிறதடி

குமரியுன்
ஓர விழி
ஒட்டுபுல் பார்வை..

கறுப்பி

மழைமேகம் தோரணமிட்ட
ஒரு அந்தி மாலையில்
அநாதையான
அவள் வீடு வந்தாள்
எலியாரை மடக்கி பிடிக்க

கண்ணிரெண்டிலும்
நிலா ஏந்தி ..இரவு மேனி
முடியாளுக்கு ...கறுப்பி என்பதே
நாமகரணமாக

மெது நடையிட்ட
அவளோசை கேட்டு
எலி நடமாட்டம் குறைய

ஆரம்பித்தது கறுப்பி அட்டகாசம்

வியப்பாய் பார்த்தவரையெல்லாம்
விழித்து பயமுறுத்தி

பக்கத்து வீடு சென்று
பாத்திரம் உருட்டி

சகுனம் பார்ப்பவர் வர
சட்டென முன் குதித்தோடி

வம்பிழுத்து வந்து
வாசல் பதுங்கினாள்

வாத்தியார்வீடு அடையாளம் போய்
அவள் பெயர் அடைகலமாக

விஷ ஜந்துமுதல்
வினை மனிதர் வரை
அவள் பார்வை கண்டு பயமுற

ஊர் பஞ்சாய்த்து கூடி
எல்லை தாண்டி விட்டுவிட்டு வரச்சொல்லி
ஒருமனதாய்...சிறுமனதாக

எது புரிந்ததோ..அன்று
மடிவிட்டு நகராமல்
இடுப்பிறங்கா குழந்தையாய்
இடித்தே வந்து படுத்திருந்தாள்

விரட்ட போகிறாயா..?????

ஏக்கம் தொனித்த
விழி தொக்கிய கேள்வி
மனதறைய........

ஒதுக்கினேன்

பரம்பரையாய் வாழ்ந்த
ஐந்தறிவு ஊரை

கனி நிறை கருவிதை


இதழ் ஒளித்த பூ
பூ உள் காய்

காய் பழு கனி

கனி நிறை கருவிதையென

வம்சக்காடு தொங்கும்

வாழைப் பூ
வளிப்பு பேரெழில்

தேகச் செழுமையடி நீ

குழந்தை தாயாகிறாள்

குழந்தை
தாயாகிறாள்

தன் 
தமையனில்

Thursday, 25 June 2015

தொப்புள்கொடி பந்த மனசு

உயரம் ஏறி
பிடி கொண்டு
தனி நின்று

தங்க மகன் சிரிக்க

தடுமாறிடுமோ

பதபதைப்புடன்
பரிதவிக்கும்

தொப்புள்கொடி
பந்த மனசு


புஷ்பாஞ்சலி

தெய்வத்திரு குழந்தை மன தேவமேன்மைக்கு
செவ்வரளிமலர் மாலை சமர்ப்பணம்

பாச நிறை பவித்திர ஆளுமைக்கு
பன்னீர் புஷ்பங்கள் சமர்ப்பணம்

முன்னேற்றங்கள் வழங்கும் அன்பின் அன்னைக்கு
அல்மண்டா மலர்கள் சம்ர்ப்பணம்

சிந்தை ஒருநிலைப்படுத்தும் சிறப்புமிக்க தேவிக்கு
செவ்விதழ் செழுமை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!!!!!!!

கற்பதிசயம் .!

நீ சுமக்கும்
நான்...

கலப்பின
கற்பதிசயம் .!

ஆடல்குல மரபாய்


ஊர் மெச்சும் உலக அழகியவள்

கால் கொண்டு தெரு இறங்கினால்
வீதி ஆண்மையெல்லாம்
வியர்த்துதவிக்கும்

அரசன் முதல் ஆண்டி வரை
உறங்கா அவளிரவு விரும்ப

ஆடல்குல மரபாய்
அனைவரிலும் துயில் துய்த்தாள்
அப்பெரும் அழகு கிழத்தி

பொன்னும் பொருளுமாய்
குவிந்த பொக்கிஷம்
இளமையோடு ..இரையாக

சுற்றிய வண்டுகள் ...
வற்றிய மதுகண்டு
மாற்று கேணி தேட

உளுத்து போன உடலில்
மிச்சமாய் தேங்கியது

பலர் கொஞ்சிய
சுருக்க உதட்டு மேல்மச்சமே

ஊரை உறங்க வைத்தவளின்

இமைமூடா இரவை

தாலாட்டி கையேந்த.இன்று
அம் மகனும் இல்லை

எம்மானும் இல்லை.....

மயானம் நோக்கியே
வழி காட்டுகிறது

பலர் நைத்து பரிசளித்த
மரண வழி தேகநோய் பாதைகள்..!!!

கனவோவியம்

கண் சிலும்பும் முடியை
காதோரம் விலக்க

கரங்கள் துடித்து
முன்னேறி தோல்வியுறுகையில்
தான் தெரிகிறது

கட்டழகி எதிர் நிற்பது

கனவோவியம் என்று...

ஒளியே தேவமே

ஒளியே தேவமே
ஒளி வாழ் பூரணமே போற்றி

அருளே நிறையே
அருள் சூல் அரவிந்தமே போற்றி

அமிழ்தே ஆனந்தமே
அமிழ்து வழியும் அன்னையே போற்றி போற்றி

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!""

நேச பேராபத்தே!!

பிரித்து
பிரித்து
வைக்கிறேன்

ஒவ்வொரு பிரிவிலும்
பிரமாண்டமாய் பக்கம்
நெருங்கிறாய்....

நேச பேராபத்தே

வளரும் சிதை மாற்றமாய்

வளர்சிதை மாற்றத்தில்
வளரும் சிதை மாற்றமாய்

பசியில்லா பிறவி
துய்க்க வேண்டும்

பாரினில் ..
குழந்தையும்..முதுமையும்

அழியாத நெகிழி நேசங்கள்

விட்டுப் போனாலும்
விலகிப் போகாமல்

சுழற்சி முறையில்
சுற்றி சுற்றி

உன்னிலேயே
தேங்குகிறது

ஆழ்மனம் தோண்டி
புதைத்தாலும்

அழியாத நெகிழி நேசங்கள்

(நெகிழி==பிளாஸ்டிக்)

மரமென உயிரென

வந்தமர்ந்தவர்கள்
நேரம் முடிந்து கிளம்பி விட

தனித்துவிடப்பட்ட
மரமும் பலகையும்
நகராத நட்பு ஆகின

குருவிக்காதல் மரம் செப்ப
தேகமனித மோதலை சிலேடையாய்
பலகை சொல்ல

குலுங்கி சிரித்த மரத்திலிருந்து
குதித்து வந்தமர்ந்தன
ஆயுள் பழுத்த முதுமை இலைகள்

கிளையுதிர் இலை
உன்னில் பாலையெனில்

காலடி கரையான்
என்னின் உயிர்வதை
நிதர்சனம் செப்பியது
உளுத்துபோகும் கட்டை

அருகருகே இருப்பாதல்
தான் நட்பானோம் என்று
அவைகள் நம்ப..........

இருக்கிறது..நடுவாய்..இருவருக்கும்
எங்கோ ஒரு மரச்சீவலே பலகையாகும்
ஆதி அந்த சொந்தம்

சுயம்பென எவருமில்லாமல்

தொடர்போடு தொடர்பு வைத்தே
மரமென உயிரென
மதமென....மனிதமென ....

இங்கு
அணு பிரிக்கிறான்

ஆதிகாட்டுப் பிரம்மன்

பொக்கைவாய் குழந்தைகள்

அருகிருந்து
அனுபவித்துபார்த்து
ரசிக்கனும்

முதுமை பெருத்த
பொக்கைவாய் குழந்தைகளின்...

நொட்டணச் சொல்
பேரின்ப சிரிப்பை...

புஷ்பாஞ்சலி

தன்னினிமை பிரிய ஆளுமைக்கு செம்பருத்தி மலர்கள்

தீர்க்கமான சிந்தனைக்கு
பாரிஜாத மலர்கள்

தைரிய வாழ்வுக்கு எருக்கம் மலர்கள்

அன்பின் அன்னைக்கு
ஆனந்த சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ...ஸ்ரீ அரவிந்தாய நமஹ..!!!


ஈர விழிகள்

ஒவ்வொருமுறையும்

சொல்ல வந்து
சொல்லாமல்
போன

நம் நேசத்தின்
மெளன சாட்சி

பேசும்
உன் ஈர விழிகள்


தொடர் அடை மழை

கன மழையை விட
பெரும்பாலும்

சாலை நசநசப்பு தருவது

விடாமல்
வீட்டுகதவடைக்க வைக்கும்

தொடர் அடை மழை தான்