Tuesday 24 February 2015

நெகிழ்ந்த நேசத்தின் தோழமை கூடு


நிறைந்த காதலில்லாமல்
நினைவில் கூட காமமில்லாமல்

நெகிழ்ந்த நேசத்தில்
எத்தனை பிரியமாய் இருந்தது

எவரும் தீண்ட,..திருட முடியா கலையாய்
அன்புச் சுள்ளிகள் எடுத்து
நமை அலைவரிசை இணைத்த
நம் தோழமை கூடு

துக்க சந்தோஷம் விழியணைக்க
தோள் சாய்ந்த உரிமைகளில்
இன உருவ பேதமையின்றி

எத்தனை சிரிப்புகள்
எத்தனை எத்தனை பகிர்வுகள்
நம்பிக்கையாடியது
நட்பின் ஆணிவேராய்

முட்டி மோதி கொள்ளாமல்
காயம் ரத்தம் இல்லாமல்
சிறு உரசல் இடித்துக் கொள்ள
இழப்பு தாங்க விரும்பா மனம்
இருப்பதை காப்பாற்ற
அருகிருந்தும் அச்சுறுத்தலுடன்

விலகல் ..விழியோடு
வலியணைத்த போதும்
வழியிருக்கிறது

நீ என் இமைநெருக்கமே
எனும் மருந்திடலுடன்

சில பாசங்களும் நெகிழ்வுகளும்
பொக்கிஷம் போல

பத்திரமாய் தான்
பூட்டிக் காக்க வேண்டுமோ

உரியவரிடம் கூட
உரிமையுடன் சொல்லாமல்

இணைந்து நின்று ஆசீர்வதியுங்கள் ஆசானே..


கலைமகளின் அவதாரமாய்..
திருமகளின் அரிதாரமாய்...
மலைமகளின் வடிதாரமாய்....
எங்கள் ஆசானின்( இரா. குமார் எழில் தாரமாய் வந்து ...
இடமோடு நின்று..வலம் சூழ்ந்து ...
வளம் நிறை வாழ்வு வாழும் எங்கள் அண்ணியாருக்கு...கலைசெல்வி குமார்

இவர் போல் யாருண்டு...இவர் நிகர் எவருண்டு ...
என்று கொள்கைதிமிர் நிறைவாழ்வு வாழும்
எங்கள் சாரின் ..கருத்திணைந்து கரம் கோர்த்து ..
அவர்தம் நிமிர்நடைக்கு அடக்க இலக்கணமாகி....
முதல் பெண் மூத்த பெண் என்றே
குழந்தையாடும்...கலைநிறை செல்வ மகளுக்கு.....

வசந்த சோலையாய் வாழ்வு விதைந்த கருநிறை முல்லைசெல்வனிடம்...
குறும்புகளாடும் ...தாய்மையாய் வந்த
முதல் தோழிக்கு......
வளம் நிறைந்த வாழ்த்துக்கள்...

அன்பின் கூடு கட்டி ஆனந்த நேசமாடி...
ஆணிவேராய் மையச் சக்கரமிட்டு...
அச்சாணியாய்...பிரியமாடும் அண்ணியாரே...
உண்ணும் போதும் உறங்கும் போதும்...
எங்கள் ஆசானை இறைவனாய் இமையணைத்த...
இனிய பொன் மகளே...

வாழ்க நீவிர் நிறைவாய் பல்லாண்டு..

திரு ஆயுள் விருத்தி திருக்கடையூர்
அமிர்தக்கடேஸ்வரர் சமேத அபிராமியம்மன்
ஆலயத்தில் தாழ் பணிந்த ..அன்று போல் இன்றும்...பணிகிறோம்...தம்பதி சமேதியராய்..

இணைந்து நின்று ஆசீர்வதியுங்கள் ஆசானே..



புஷ்பாஞ்சலி*

விசால மனம் தரும் விவேக அன்னைக்கு 
செவ்வரளி மலர்கள் சமர்ப்பணம்

தெளிவான பாதை தரும்
தெய்வீக ஆளுமைக்கு பலவண்ண ரோஜாக்கள் சமர்ப்பணம்

தளராத நம்பிக்கை தரும்
தவ யோக பிரியத்திற்கு
தாமரை மலர்கள் சமர்ப்பணம்

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்யமயி பரமே..!!!!

பவித்ர நேசமோ..

பேச வந்ததை
பேச முடியாமல்
பேச காக்க வைத்து

அலுவல் குறுக்கிடும்
நிமிட மணித்துளிகளில்

ஆவலாதியாய் பறந்து
நெருடித் தவிக்குது உயிர் துடிப்பு

பேசிடும் ஒரு நொடியில்
தழுவிஅணைக்குது
அமைதி நிம்மதி

ஆதூரமான ப்ரியமே

உன் பெயர் தான்

பவித்ர நேசமோ.....!!!!

Monday 23 February 2015

மொழியில்லா..ஒலி பந்தமாய்

அதுக்கு புரியுமா ....தெரியாது
தினம் ...அதுகிட்ட பேசுவான்

சலுகை மடியமர்ந்து
கொஞ்சலாய்
பார்க்கும்..

அதிகாரமாய் மிரட்டி
அடுத்த நிமிடம்
அணைப்பான்

இல்லாமல் அவனும்
இருக்க மாட்டான்

விரட்டினாலும் அதும் போகாது

பெயரிட்டு உணவிட்டு
குளிக்க உறங்க
வைத்து தாலாட்டும்

வாயில்லா ஜீவனுக்கும்
வளர்க்கும் பிள்ளைக்கும்
நடுவே

ஏதோ....ஓர்

தாய்மைத் தொடர்பு
இருக்கிறது

மொழியில்லா..ஒலி பந்தமாய்


ஆனந்த தேவியே போற்றி

ஆயிரம்கோடி பிரியங்கள் சூழ்
ஆனந்த தேவியே போற்றி

ஆசை நம்பிக்கை அன்புதரும்
ஆதார வேதமே போற்றி

ஆயிரம் மலர்பொருள் அன்பு பிரியமேபோற்றி..

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ.!


என் சுவாச மழையே

எதிர்பார்க்க
காக்க வைத்து
எதிர்பாராமல்
பின்அணைத்து

மென் கழுத்து மெல்ல வருடி
புல்லரிக்க பூஜை
செய்த இறைவனே

உன்
ஆலிங்கன தழுவல்களில்
பள்ளிகொண்ட பிள்ளைமனம்
ப்ரிவறிய
ப்ரியா நினைவேந்தி

வறண்ட பாலை விழிகளோடு
உறைந்து தவிக்கிறதடா....

என்று வருவாய்
என் சுவாச மழையே

பச்ச மச்சத் தக்காளி

கனிந்து பெருத்து
காம்பு தாங்காது
கொழுத்த
சின்ன அழகு சிமிட்டி

நிலவுநடக்க
நீள் இரவு விழித்து

விடிகாலையில்
வேர்த்து
சிவந்துகிடக்கிறா

பருவமச்சான் பறிச்ச
பச்ச மச்சத் தக்காளி

உயிராய் நேசிப்பவர்க்கு

கைவலியோ
தலைசுமையோ

பெரிதாய் தெரிவதில்லை

பசிதூக்கம் மறந்து
செய்தொழிலை

உயிராய் நேசிப்பவர்க்கு

என்னில் எழும் ஒரேகேள்வி



பொய்யென தெரியா
பொய்கள் சொல்லிவிட்டு

பிள்ளை விழி விழித்து
பிரியமாடி நிற்கிறாய்

நேசம் மன்னித்த போதும்
பந்தம் விலக்கி வைக்க
சொல்கிறது ....
உயிராடும் நேர்மை

உணர்வாய் எனக்குள் நீ
அணைவாய்
நிறையும் போதெல்லாம்

என்னில் எழும் ஒரேகேள்வி
உனக்கென துடித்து

உன்மேல் அடி
விழும் முன் தாங்கி
கேடயமாகும்
என்னிடம்

எப்படி ....
எப்படியடி உனக்கு
பொய் சொல்ல மனசு வருது??????????



தாமரை நளனமிடுகிறாய்

தளிர்விரல் வளைத்து
தாமரை
நளனமிடுகிறாய்

மீச துடிக்க
தவிக்கிறதடி

இழுத்து முத்தமிட
வேகமாடும்
முரட்டு மாமன் இதழ்கள்

மன பூமிசுற்றல்

நொடி நொடிக்கு
இன்ப துன்ப உணர்வாளும்
மன பூமிசுற்றலில்

தப்பித்துக்கொள்ளல்
என்பது
அத்தனை எளிதல்ல
மானுடர்க்கு

புஷ்பாஞ்சலி*

மனம்சூழ் குழப்பங்கள் நீக்கும்
மகரந்த அன்னைக்கு....கொத்துமலர்கள்சமர்ப்பணம்

இன்பநிறை வாழ்வளிக்கும் வசந்ததேவிக்கு
வெள்ளை செவ்வந்திமலர்கள் சமர்ப்பணம்

சாந்தியஒளிப்பிரியமாய் வந்து
சங்கடங்கள் களையும் வெற்றி மாதாவுக்கு
செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!

தேன் பழ உதடுகள்

இனிப்பு புளிப்பு
துவர்ப்பு சுவையுடன்

கனிந்து கள்ளூறிய
மதுரச முத்தங்கள்
ஒளித்து மினுமினுத்து

இளமை சுண்டியிழுக்கிறதடி

உன்
தேன் பழ உதடுகள்....

விழி துடைக்கிறாள் அம்மா

செய் தொழிலில்
தோல்வியடைந்து
கீழ் விழ....

அப்பா பொறுப்பில்லாதவன்
என்று திட்ட

உடன்பிறந்தோர்
உதவி கேட்கும் முன்
வாசலடைக்க

எல்லாம் என் தலைவிதியென
மனைவி அழ

பிள்ளைகள் எப்போதும் போல்
நினைத்தது கேட்க

நொடிக்கு நொடி
மறுகி துவளும்
மரண மணித்துளிகளில்

தலை கோதி
தயங்காதே ராசா

நானும்
என் கை
உழைப்புமிருக்க

விழி துடைக்கிறாள்

எது போனாலும்
எனைவிட்டு போகாத
அம்மா

சுபிட்சத் திருநாள்.....பிப்ரவரி 21


சுபிட்சத் திருநாள்.....பிப்ரவரி 21
மலர்களின் தாய்.....மண்ணில் அவதரித்த அன்புப் பெருநாள்

ஆளுமைவேதமாய்...சூட்சம பிரியாமாய்
அன்பு எனும் நாதமாய் ஆனந்தஒளிரூபமாய்
மலர்பிறந்த மகத்துவமே
அன்னையென வந்து ஆளுமை செய்யும் தத்துவமே

கருணைவிழி கொண்டு
கனிவு பாதைகாட்டி
கவலை துயர் நீக்கி
எதுவந்தபோதும் நானிருக்கிறேன்
உன்னுடன் மகனே மகளே....
கலங்காதே ..தயங்காதே தடுமாறேதே ...என்று தாவி பிள்ளையென அணைக்கும் பேரின்பமே

பாரீஸ் பிறந்து பவித்ர யோகம் கற்று
பாங்குநிறை வாழ்வுயெந்தி....என் மண்ணில்
பாண்டி வந்து உறைந்த உயர்நிறை உயிரே

அகில் உலகையும் அன்பால் கட்டி ஆளும் அதிமனமே
ஆழ்நிறை பாசமே
மலர்..கனி காய் இலை...அனைத்திற்கும் உயிரும் பொருளும் தந்து....உண்மை ஆளும் சுகந்தமே...

அம்மா அம்மா என்றே கதறும் பிள்ளை மனதை
அமைதியென சூழ்ந்து உண்மை வழிகாட்டி வரம் தரும் நிம்மதி வசந்தமே

கதியென வரும் பிள்ளையை....காக்கும் மோட்சமே

நின் திருநாளில்...நின்பெரும் ஆளுமையில் மனம் கசிய..விழிநீர் வழிய ....நின்திருவடி சரணடைகிறோம் தாய்மையே.....

சுவாசமாய் சூழ்ந்துள்ள ஆவித்திரு ஆளுமையே
அணைத்துக் காத்து வழிக்காட்டு மா......வானவில் ஓவியமே

அன்னையே சரணம்...என்றும் நின் திருவடி ஆனந்த சரணம் பரமமே

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே!!


குழந்தை சுமந்த தாய்மையில்

பாவாடை இழுத்து சொருகி
பாண்டி ஆடிய

பக்கத்துவீட்டு அக்காவோடு
வாயாடி சண்டையிட்ட

குச்சி ஐஸ் ஒழுகவிட்டு
சிலுப்பி நடந்த

சத்தம் போட்டு சிரித்த
பால்யத்தை

பந்தலிட்ட ஒருநாள்
திருமண விளையாட்டில்

பங்கு போட
வந்துவிட்டான்

குழந்தை சுமந்த
தாய்மையில்
அம்மா என்றழைக்க மகன்



கர்வத் திமிரழகியடி நீ

பழவாசனை
தூண்டிலிட்டு

கனியா
காய் பரத்தி

கொறிக்க
வலி தாங்கி

தவிக்கும்
ஆன்மக் கிளியின்
அடங்கா
பசியடக்கி

கொய் யா
கிளை இடைபெருத்த

கர்வத் திமிரழகியடி நீ

தாயுமானவனுக்கு

இரண்டு வயது
மகளுக்கு எளிதாய்
சொல்லிக் கொடுத்ததை

பத்துவயது மகள்
எதார்த்தமாய்
செய்யும் போது

பயமாகத் தான்
இருக்கிறது

தாயுமானவனுக்கு

தேக ஏகப்பிரியங்கள்





உலர் நிலா
இதழணைத்து

எரி நட்சத்திர
முத்தமிடுகிறாய்

வியர்த்து
தவிக்கிறதடா

வெட்கம் வடிந்து
வேகும்
தேக ஏகப்பிரியங்கள்

நேசக்களப் போரில்

அமைதி
மொழியெடுத்து

ஐம்புலன் கணை
தொடுக்கிறாய்

திமிர் நிமிர்
அதிகார சேனையாவும்
சடசடவென சரிய

நிராயுதபாணியாய்
நான் எனும்

நாண்
அறுபடுகிறேனடி

உன்
நேசக்களப் போரில்

கல்கி திருமகனார்

கனவுகளில் மொழியெடுத்து
வாழா மனிதர்களை
வாழ்ந்த சரித்திரமாய்
கதையாண்டு

உணர்வுகளின் பாதையில்
கலப்பையோட்டி
மனம் உழுது

வீரத்தோடு சபதம் படைத்து

வாசிக்க வாசிக்க வசிப்பிடம் தந்து
உள்ளிழுக்கும்..வரலாற்று புதைகுழி
பொன்னியின் செல்வனின்

சோழ ஆளுமைச் செல்வராய்
என்றும் வாழும்

தொன்மைதமிழ் விதை நெல்

கல்கி திருமகனார்

வாழ வழியில்லாத தெய்வங்கள்

கணபதி
முருகன்
கருப்பசாமி
மங்காத்தா
என

கோவில் வாசலிலும்
வரிசையாய்
கையேந்தும்

வாழ வழியில்லாத
தெய்வங்கள்

Friday 20 February 2015

ஒளிசூழ் சுகந்தமே போற்றி

சூட்சம ஒளிசூழ் சுகந்தமே போற்றி

வழிகள் தரும் வாழ்வே போற்றி

இனிமை நிறை இசையே போற்றி

அம்மா எனும் அற்புதமே போற்றி

மனம்நிறை மகிழ்வேந்தி மலர்பாதம் சரணடைகிறேன் தாய்மையே

வெற்றியாய் உடனிருந்துகாத்தருள்வாய் வேள்வியே...!!!!

ஓம் ஆனந்தமயி சைத்தன்யமயி சத்யமயி பரமே...!!!!

ஊற்றுத் தாய்மை

அழாமல்
அழைக்காமல்

பார்க்கிறான்

ஓடிப்போய்
அவன் ஏக்கத்தை
எடுத்தணைக்க துடிக்கிறது

உள் பீறிடும்
ஊற்றுத் தாய்மை

எட்டிநின்ற மயக்கமாய்

ஆலிங்கனம் முடிந்த
அந்திமா பொழுதுகளில்

அசதி கிறக்கமாய்
நான் சரிய

எட்டிநின்ற மயக்கமாய்
அவள் குளிர

பந்தி பரிமாறும்
ஆசைப் பார்வைகளும்
அர்த்தமில்லா சிரிப்புகளும்

முழுவெட்க
முரசு கொட்டுகிறது

அதுவரை கடந்த
ஆனந்த களப்போரை

மனிதனெனும் இருகால் பரிணாம வளர்ச்சி

பழந்திண்ணி ரெக்கை
முதலை வால்
முரட்டு கொம்பு
கூரிய நக
பறவைக்கால்களுடன்

அணல்கண்
டயனோசர் முக
பெயர்தெரியா

உள்மன அசுரனுடனே

ஒவ்வொருவரும்
போராடி
உறங்கி நடமாடுகிறோம்

மனிதனெனும்
இருகால்
பரிணாம வளர்ச்சியில்

பழமொழி செப்பி.

பிறர் அறிய
நெருங்கி அருகில்
நிக்காம

அவர் அறிய
நிமிர்ந்து பார்க்காம

குனிஞ்சே கூன் வளைஞ்ச
அப்பத்தா

அடிக்கடிஎடுத்து
உத்து பாத்து

க்கும்ம்ம்னு...நொட்டனையிழுத்து
பழமொழி செப்பி..ரகசியமா ரசிக்கிறா
பட்டாபட்டி தாத்தனை

ஒளிப்படத்தில்


விழுது வெள்ளாமை

பருவத்திமிர் நானாகி
பத்துமாதம் நீயாக

பனிக்குடம் வழுகி
வம்ச வேரூன்றுகிறதடி

விதைநெல் வாழ்வின்
விழுது வெள்ளாமை

செல்ல சிறுக்கி மனசு...!!!!

நீ பேச கூடாதா...

நீ கேட்க கூடாதா......

தன்முனைப்பு
மேலோங்கி

தத்தளித்த போதும்
தடுமாறாமல்

தொடரும் நினைவு
தொட்டு தொட்டு

சிணுங்குதய்யா...

செல்ல சிறுக்கி மனசு...!!!!

உண்மையெனும் திமிர் நேர்மை

பணம் பகட்டுகளுடன்
பந்த பாசத்தையும்

விலக்கி

எவர் செய்யினும்
தவறு... தவறே...

என்றே
நிமிர் நடக்கும்

எப்போதும்

உண்மையெனும்
திமிர் நேர்மை

புஷ்பாஞ்சலி

தெய்வீக உருமாற்றம் தரும்
தேவ ப்ரியத்திற்கு செம்பருத்தி மலர்கள் சமர்ப்பணம்

இன்பவேள்விகள் தரும்
வெற்றியின் சக்திக்கு ஆழ்சிவப்பு ரோஜாக்கள் சமர்ப்பணம்

தைரியமனம் தந்து உடன்சூழும்
நம்பிக்கைக்கு ...எருக்கம் பூக்கள் சமர்ப்பணம்

மணம் கொண்டமலர்களை ..மனகரமெடுத்து சமர்ப்பிக்கின்றேன் தாயே

காத்தருள்வாய் நீயே....!!!!!!!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நமஹ....!!!!!!!!!!!!!

மண் கூட்டாஞ் சோறை.

அம்மா மனைவி
சமையலை
ஆயிரம் நொட்டனை
சொல்லும்
ஆளுமை திமிர் மகன்

சத்தமில்லாமல்
சந்தோஷமாய்
சாப்பிடுகிறான்

மகன் சமைத்த
மண் கூட்டாஞ் சோறை....!!!

ஈரகைபிடி சுவாச வாசனை

பிடி சாம்பலாகிப் போன
தாத்தாவின்

ஊன்றுகோலில்
உயிர்வாழ்கிறது

அவரின்
ஈரகைபிடி
சுவாச வாசனை

பிட்டு தந்தாள் பிரியத்தை

பிட்டு பிட்டு தந்தாள்
பிரியத்தை

திகட்டாமல்
தித்திக்கிறது

தீண்டும் போதும்

திட்டும் போதும்

நினைவில் நெருங்கி

நேரில்
விலகி நிற்பவள்

நினைவில்
நெருங்கியே நிற்கிறாள்
தலைமுட்டி

புலரும் கதிரோனில்

புலரும் கதிரோனில்

நம்மிலிருந்து
எழுகிறான்

ஓர் போர்வீரன்

சந்தோஷ துக்கமாய்
சூட்சமம் ஒளித்த
அந்த விடியலை

அனுபவமாய் வெல்லும்
ஆவேசத்துடன்...

சிட்டுக் கற்பனை

நீள் வானெங்கும்
நீந்தி

தனித்த போதும்
தனிமையில்லாமல்

உல்லாசம் பறக்கிறது

உனை... எனை
இரு சிறகாய்
உருவகம் கொள்ளும்

சிட்டுக் கற்பனை

செல்ல மகள் படிக்கிறாள்

அறை முழுதும்
விசிறிய தாள்கள்

சுவரெங்கும் ஓவியகிறுக்கல்கள்

சத்தமில்லாத வீடு

செல்ல மகள் படிக்கிறாள்

வைராக்கியபாறை மனம்

ஊர் பெயர் தெரியாத

மாசற்ற மழலை முகம்
பார்க்கும் போதெல்லாம்

தன்னால்
உள்குழைந்து இளகுகிறது

எஃகு கவசமிட்ட
வைராக்கியபாறை மனம்

இமை அணைப்பாய் தேவமே

ஆனந்தமயியாய் வந்த அன்பின் சொரூபமே
நீடித்த வாழ்வு நல்கி நில உயிர்கள் காக்கும் வேதமே

வளம் பலம் தந்து வெற்றியாய் நிறையும் தாயே
மனதோடுமகிழ்வு தரும் நிம்மதி பிரியமே

மனம் செயல் எண்ணம் வாக்கு தூய்மையாய் புகுந்து
நல்லொழுக்க வாழ்வு அமைத்து.....
தன்னம்பிக்கை ஆளுமைகளுடன்...
குழந்தைமனப் பிரியங்கள் உடன் சூழ்ந்து
உன்னதக் கல்வியாய்...
உவகைபுகழாய்...
உற்சாக சிறகாய்....
உத்வேக நம்பிக்கையாய்......எண்ணியயாவும் கைகூடி
உயர்வாழ்வு வாழ்ந்து....அவனி சிறக்க
நிம் மலரடி சரணடைந்து வேண்டுகிறோம் அன்னையே
இமை அணைப்பாய் தேவமே

ஓம் நமோ பகவதே ..ஸ்ரீ அரவிந்தாய நமஹ...!!!!!!!!!!!!!

சுவாசம் நீயானால்....

நிற்கிறேன் நான்

நிழல் விழுகிறாய் நீ

வாழ்தலும் வசித்தலும்
பேரின்ப பெரும் நிம்மதியடி

சுவாசம் நீயானால்......

போன்சாய் காதலி

ஓரச்சிறு பார்வையில்
விதைக் காலூன்றி

கனி தரும்

போன்சாய் காதலியடி நீ

நம்பிக்கை வேரற்று

உண்மையான நேசிப்பு
போலி உருக்களிடம்

சிக்கி
கொல்லும் போது

மனிதப் பிறவி மீதான
நம்பிக்கை
வேரற்று போகிறது

வாழ்வுப் பேரிளமைகள்

எங்க தாத்தா
எங்க பாட்டி

என்று
அக்காவும் தம்பியும்
மாறி மாறி
மடிதாவி

சண்டையிட்டு
அழுது அமர

சந்தோஷமாய்
அணைத்து சிரித்து

ஆயுள் கூடுகிறது

வரப்பொக்கிஷ
வாழ்வுப் பேரிளமைகள்