Sunday, 14 May 2017

கருணையின் கதவுகள்
தட்டுங்கள் திறக்கப்படும் 
என்றனர்
தட்ட தட்ட
திறக்கப்பட்டது 
திறந்த வழியெங்கும் 
கருணை பரவி கிடந்தது 
செல்ல செல்ல நம்பிக்கை துளிரும் விட்டது
பரமபத கால விளையாட்டில்.........
முடிவடைந்த பாதையின் வாயிலில்
பழைய சாத்தான் நின்று 
கெக்கரித்துக் கொண்டிருந்தான் 
கை தந்த தேவனோ 
கழுமரத்தில்
கருணையின் எல்லா வழிகளும் 
எப்போதும் முடிவடைவதில்லை
சொர்க்கத்தில்


Saturday, 18 March 2017

அடைசல்பிரியம்அன்றைய நாளின் விடியல்
மழை சூடியிருந்தது
இமை திறக்கவிடாமல்
நாசிகோதியது மண்வாசம்
எழமுடியாதபடி இறுக்கமான 
அணைப்புக்குள் கனந்திருந்தேன்
அசைவு கண்டு 
இடைவிடாத முத்தங்களால் 
நெகிழும் 
இடைவெளி நிரப்பிக் கொண்டிருந்தாய்
துவள துவள நழுவும் விரல்பற்றி
வெகுதூரம் நடத்தி சென்றிருந்தாய்
பிரியத்தின் விளிம்பு நுனியில் நின்று 
விழி பருகி கொண்டிருந்தோம்
சுண்டுவிரல் இடறினால் சுவடின்றி
தொலையும் அபாயத்திலும்

வெகுநாட்களுக்கு பின் 
அடைசல்பிரியங்களுள் சிக்கிய மனம்
அடம்பிடித்தது..... வெகுநேரம்

கனவுப்பாதையிலிருந்து
இயல்பு திரும்ப


எவரையும் எதிர்பாராமல்
ஓடிக்கொண்டிருந்தது நிமிடம்.
யார் பேச்சையும் கேட்காமல் 
இலையசைத்துக் கொண்டிருந்தது 
காற்று 
நடுவான் நகர்ந்து அந்தி நோக்கி
பயணித்திருந்தான் பகலவன்....
பசி மறந்து 
கடல்நோக்கி காத்திருந்தன
கன்னியப்பன் வளர்புறாக்கள்
தூரத்து வெடியோசை
பட்டாசாய் கேட்டது
வேகமாக ஓடி வந்த பேரலையில்
ஒப்பாரி நுரை கசிந்திருந்தது

சேதியறியாத கன்னியம்மா
கை தவறி
நிலங் கவிழ்ந்தது
நெத்திக் குங்குமம்

Monday, 17 October 2016

தோள் கொடு


தோள் கொடு

விடியல் 
தொடாமல் 
தொடரட்டும் 

மழை

வெளிச்சம் சுற்றி 
இறகடித்து கவிழ்ந்தன
ஈசல்கள்

குளிர் தென்றல் 
அனுப்பி
கால தாமதம் செய்கிறது
நட்சத்திரங்கள் தூங்க வைத்து வரும்

சிற்றின்ப ஈசலாய்

அஸ்திவாரமின்றி
கோபுரம் கட்டியேறும்
பொய்மை
:
:
:
தலைகுப்பற தானழிவோம்
ஒரு நாளனெத்தெரிந்தும்

#சிற்றின்ப ஈசலாய்
பாச நதி


உற்று உன் முகம் பார்க்க 
ஒரு போதும் 
ஆவல்பட்டதில்லை
அருகமர்ந்து பேசி சிரிக்க
ஆயத்தபட்டதுமில்லை
மாதம் ஓரிரு முறை வரும்
அலைபேசியோ
வாரந்தவறாது வரும்
தனித் தகவலோ
தாளா பாச நதியென
வனப் பெருக்கெடுக்க
சுவடழித்து சென்ற காலச்சூறாவளியில்
கழன்று சுழல கற்றுக்கொண்டோம் 
ஏகோர் அருகிருந்தும்
எவருமில்லாதவராய்

இன்றும் என்றும்
ஆங்கோர் அமைதியில்
நினைநரம்பு சுண்டிவிட.....
தினம் பலகுரல் மோதும் 
செவிப்பறையுள் 
ஆயுளிருக்கும்

இயல்பேச்சிடையே நீ
இழுக்கும் 
#கேலி ராகம்