Tuesday 16 June 2015

தானெனும் தன்நம்பிக்கை

சுற்றியெங்கும் இருள்சூழ
மெல்லிய நிலவொளியில்

அத்துவான கடலில்
அவன் பயணித்திருந்தான்

அசைந்தாடும் படகு போலே
உள்மனமும் இலக்கின்றி

தொடர்ந்த கடன் சுமையும்
தோல்வியடைந்த வாழ்க்கை வதையும்

அவனை மரணிக்கச் செய்திருந்தன

மாளிகை நீள்வீடுசொந்தம் முதல்
மனைவியென்று உயிரணைத்தவள் வரை
அத்தனையும் சுயநலத்தின் பிம்பமாய்

ஓடிஓடி சம்பாரித்தவனை
ஓயும் வரை துரத்திக்கொண்டே இருந்தனர்

ஒவ்வொரு உறவினராய்
கண்மூடி யாசிக்கையில்
கடைசி எஞ்சியது ........கழிவிரக்க துரோகமே

சலிப்பாய் சயணித்திருக்க
சட்டென ஒளிவெள்ள சிறகு வீசி
வானிறங்கியது
ஓரு நட்சத்திர தேவதை

கைபிடித்து..தலைகலைத்து
செல்லமூக்குரசி...மெல்ல நெற்றியிடித்து
தோள்சாய்ந்து சுகந்தபடுத்தி
தோல்வியேது உனக்கு
துவளாதே ராஜகுமாரா

விடியும் வரை என்னிரவு உனது என்றது
மென்மையில் கிறங்கி
தாயென கண்டு தன்னவள் என்று
இறுக்கி ..முத்தமிட முகிழித்தி
இருந்துவிடு என்னோடே .....
கட்டிக் கொண்டு தூங்கி கெஞ்சி
துஞ்சியது ஈங்கணோர் நெஞ்சு

மெல்லசிரித்த தேவதை..மென்காதில்
மென்பிரியமாய் உரைத்து நகைத்தது

நான் யார் தெரியுமா?

உன்னுள்ளே உன்னில் உயிராய்
மானம் விழிக்கும் தன்னம்பிக்கை தேவி

மனிதர் தன்னலம் கண்டு
என்னில் நீ சலித்து தோற்கலாமா

தலைசிலுப்பி தன்னருமை உணர்ந்தவன்
தன்மையாய் புரிந்தான்

தானெனும் தன்நம்பிக்கை இறகுயிர் உடனிருக்க
என்றும் தனிமை தனக்கில்லையென

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..