Tuesday, 30 June 2015

கறுப்பி

மழைமேகம் தோரணமிட்ட
ஒரு அந்தி மாலையில்
அநாதையான
அவள் வீடு வந்தாள்
எலியாரை மடக்கி பிடிக்க

கண்ணிரெண்டிலும்
நிலா ஏந்தி ..இரவு மேனி
முடியாளுக்கு ...கறுப்பி என்பதே
நாமகரணமாக

மெது நடையிட்ட
அவளோசை கேட்டு
எலி நடமாட்டம் குறைய

ஆரம்பித்தது கறுப்பி அட்டகாசம்

வியப்பாய் பார்த்தவரையெல்லாம்
விழித்து பயமுறுத்தி

பக்கத்து வீடு சென்று
பாத்திரம் உருட்டி

சகுனம் பார்ப்பவர் வர
சட்டென முன் குதித்தோடி

வம்பிழுத்து வந்து
வாசல் பதுங்கினாள்

வாத்தியார்வீடு அடையாளம் போய்
அவள் பெயர் அடைகலமாக

விஷ ஜந்துமுதல்
வினை மனிதர் வரை
அவள் பார்வை கண்டு பயமுற

ஊர் பஞ்சாய்த்து கூடி
எல்லை தாண்டி விட்டுவிட்டு வரச்சொல்லி
ஒருமனதாய்...சிறுமனதாக

எது புரிந்ததோ..அன்று
மடிவிட்டு நகராமல்
இடுப்பிறங்கா குழந்தையாய்
இடித்தே வந்து படுத்திருந்தாள்

விரட்ட போகிறாயா..?????

ஏக்கம் தொனித்த
விழி தொக்கிய கேள்வி
மனதறைய........

ஒதுக்கினேன்

பரம்பரையாய் வாழ்ந்த
ஐந்தறிவு ஊரை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..