Sunday 2 August 2015

இறை கைப்பிள்ளை

எப்பிறவி வினையோ
இப்பிறவி கழிவோ

மா என்றழைக்கும் முன்
குழறிய மொழியில்
உள்ளிழுத்த நாக்கு வழி
உமிழ் வடிந்தது

பார்த்தவிழி பார்த்தபடி இருக்க
அழைத்தாலும் திரும்பவில்லை

எடுத்ததெற்கெல்லாம் சிரித்து
எந்தை வேதனைகூட்ட

எவரிட்ட சாபமோ
இருளிட்ட பய அதிர்வோ

மூளைநரம்பு பிறழ்வென
குறைமாதவளர்ச்சி சொல்லி
மருத்துவமும் கைவிரிக்க

வேண்டாத தெய்வமில்லை
போகாத கோவில்லை

வேதனைசொல்லி அழதிரணியற்று
ஊனமாய் ஊமைமனம்
உறைந்து பொசுங்க

பத்துமாத சுமையை
ஆயுசெங்கும் இடுப்பில் தாங்கி

கருகொடுத்தவன் ஓடினாலும்
உடன்பிறப்பெல்லாம் உதறினாலும்
கடைசிவரை வழியும் வாய்துடைத்து
உணவூட்டி....

இயற்கை கழிவகற்றி
இறைவனளித்த பரிசு என
மன உரம் கொண்ட போதும்

மன்னவன் நீயடா...
சிங்காரித்து கொஞ்சும் தெய்வத்தாயை

சிரிப்பொழுக கத்தி அடிக்கிறது

இன்னதென்று
தன்பிறவி புரியாத
இறை கைப்பிள்ளை

No comments:

Post a Comment

சுந்தர நேசத்திற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி..